×
Saravana Stores

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜ கூட்டணியை தோற்கடித்து சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு பாடம் புகட்டுங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜக கூட்டணியை தோற்கடித்து ‘சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது: விக்கிரவாண்டி மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்! ஜூலை 10ம் தேதி நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா என்கிற சிவசண்முகத்துக்கு, உங்கள் உள்ளம் கவர்ந்த உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியா கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடும் அன்னியூர் சிவா என்கிற சிவசண்முகத்தை உங்களுக்கு தனியாக அறிமுகம் செய்ய வேண்டியதில்லை. உங்கள் மண்ணின் மைந்தர் அவர். மக்களோடு மக்களாக, மக்கள் பணியாற்றும் மக்கள் தொண்டர்தான் அன்னியூர் சிவா.கடந்த 1986ம் ஆண்டு முதல், அன்னியூர் சிவாவை நான் பார்த்து கொண்டிருக்கிறேன். தடம் மாறாத – நிறம் மாறாத கலைஞரின் உடன்பிறப்புகளில் அவரும் ஒருவர்.

தலைவர் கலைஞரின் பாணியில் சொல்ல வேண்டும் என்றால், ”தன்னால் கழகத்துக்கு என்ன லாபம் என்பதை மட்டுமே சிந்திக்கும் ரத்த நாளங்களில் ஒருவர்”. விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றிய இளைஞர் அணித் துணை அமைப்பாளராக, ஒன்றுபட்ட மாவட்ட தலைமை பொதுக்குழு உறுப்பினராக, அன்னியூர் கூட்டுறவு விவசாய வங்கித் தலைவராக , மாநில விவசாய அணி துணை செயலாளராக என்று பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், தற்போது விவசாய தொழிலாளர் அணியின் மாநில செயலாளராக பொறுப்பு வகித்துக் கொண்டிருக்கிறார்.

இப்படிப்பட்ட அன்னியூர் சிவா அவர்களை, விக்கிரவாண்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்து அனுப்பி வையுங்கள் என்று அன்போடு நான் கேட்டுக் கொள்கிறேன். அன்போடு மட்டுமல்ல; உரிமையோடும் கேட்டு கொள்கிறேன். நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், கடந்த மூன்றாண்டு காலத்தில் செய்து தரப்பட்டிருக்கும் நலத்திட்டங்களை விவரித்து சொல்ல வேண்டும் என்றால் நேரம் போதாது.

* 1 கோடியே 16 லட்சம் மகளிர் மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை பெறுகிறார்கள். இந்த மாதத்தில் இருந்து புதிதாக 1 லட்சத்து 48 ஆயிரம் பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை தர போகிறோம்.

* மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி செய்து தரப்பட்டிருக்கிறது.

* ’நான் முதல்வன்’ திட்டத்தின் மூலமாக, இளைஞர்கள் அனைத்து வேலைகளையும் பெற தகுதி உள்ளவர்களாக உயர்த்தப்பட்டு வருகிறார்கள்.

* ‘புதுமைப்பெண் திட்டம்’ மூலமாக, அரசுப் பள்ளியில் படித்து கல்லூரிக் கல்விக்கு வரும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1000 தரப்படுகிறது.

* மாணவர்களுக்கு ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் மூலமாக ரூ.1000 தர போகிறோம்.இப்படி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஏதாவது ஒரு நேரடி பலன் கிடைக்கும் வகையில், நம்முடைய அரசு செயல்பட்டு வருகிறது. திமுக அரசு என்றாலே, சமூகநீதி அரசு. இது உங்கள் எல்லோருக்கும் நன்றாக தெரியும். பிற்படுத்தப்பட்டோருக்கு தனித்துறையை உருவாக்கியதே தலைவர் கலைஞர்தான். வன்னியர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 20 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கிய ஆட்சி, தி.மு.க. ஆட்சி. அம்பேத்கர் பிறந்தநாளை, ‘சமத்துவ நாளாக’ அறிவித்திருக்கிறோம்.

கழகம் வளர்த்த கொள்கை குன்றான ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் அமைக்கப்படுகிறது. 1987ல் நடந்த போராட்டத்தில், துப்பாக்கிச்சூட்டில் பலியான சமூகநீதிப் போராளிகளுக்கான நினைவகம் கட்டி வருகிறோம். இது இரண்டையும் சீக்கிரமே விழுப்புரத்தில் நான் திறந்து வைக்க இருக்கிறேன். எல்லா மக்களுக்கும் பொதுவான மக்கள் நலத்திட்டங்கள் தொடர, உங்களின் ஆதரவை வேண்டி நிற்கிறோம்.

சமூகநீதிக்கு எதிரான பா.ஜ. கூட்டணியை தோற்கடிப்பது மூலமாக, சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்ளுக்கு தக்க பாடம் புகட்டுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா என்ற சிவசண்முகம், விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கும் உண்மையான சட்டமன்ற உறுப்பினராக இருப்பார். மறவாதீர், உங்கள் சின்னம் உதயசூரியன். வாக்களிப்பீர் உதயசூரியன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

The post விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜ கூட்டணியை தோற்கடித்து சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு பாடம் புகட்டுங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : BJP alliance ,Vikravandi ,Chief Minister ,MK Stalin ,Chennai ,M. K. Stalin ,Vikrawandi ,M.K.Stal ,Dinakaran ,
× RELATED ராஜீவ் காந்தி குறித்து அவதூறாக பேச்சு;...