×

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு

சென்னை: ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து திமுக சட்டத்துறை சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, இந்திய திருநாட்டின் நீதி பரிபாலனத்திற்கும், மாநில சுயாட்சிக்கும், மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் எதிரானது என்பதோடு, இச்சட்டங்கள் ஜனநாயக நாடாக திகழும் நம் இந்திய திருநாட்டினை, ‘காவல்துறை ஆட்சி நாடாக” மாற்றிவிடும் அரசியல் அமைப்பிற்கு எதிரான – ஜனநாயகத்திற்கு விரோதமான ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தி.மு.க. சட்டத்துறையின் சார்பில், தி.மு.க. சட்டத்துறை மாநில நிர்வாகிகள் மற்றும் தலைமைக் கழக வழக்கறிஞர்கள், சென்னை மாவட்டங்களைச் சேர்ந்த வழக்கறிஞர் அணி அமைப்பாளர்கள் ஒருங்கிணைப்பில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, சென்னை, எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் ”மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம்” நடைபெற உள்ளது. தி.மு.க.சட்டத்துறைச் செயலாளர் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், தி.மு.க.சட்டத்துறைத் தலைவர் மூத்த வழக்கறிஞர் விடுதலை, சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

சட்டத்துறை இணைச் செயலாளர் கே.எஸ்.ரவிச்சந்திரன் வரவேற்கிறார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தொடங்கி வைக்கிறார். ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வபெருந்தகை, மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்மாநிலக்குழுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் திருச்சி சிவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்மாநிலக்குழு செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேயக் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தலைமை கழக சட்ட தலைமை ஆலோசகர் மூத்த வழக்கறிஞர் வில்சன், கழக சட்டதிட்டத் திருத்தக்குழுச் செயலாளர் வழக்கறிஞர் கிரிராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா நிறைவுரையாற்றுகிறார். சட்டத்துறை துணைச் செயலாளர்கள் ஜே.பச்சையப்பன், கே.சந்துரு ஆகியோர் நன்றியுரை ஆற்றுகின்றனர்.இந்த உண்ணாவிரத அறப்போராட்டத்தில் மாநில, மாவட்ட, நீதிமன்ற தி.மு.க. வழக்கறிஞர் அணி நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் மற்றும் முன்னணியினர், தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு பாசிச ஒன்றிய பாஜக அரசு அமல்படுத்தியுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தங்கள் கண்டனத்தை பதிவு செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

The post ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : EU ,Dimuka ,Law Secretary ,N. R. Little ,Chennai ,Dimuka Law Department ,N. R. ,minister ,Mu. K. ,Stalin ,Legal Secretary ,Dinakaran ,
× RELATED மத, சாதிய வெறுப்புணர்வை முறியடிக்க...