- பாரம்பரிய மாடு மாலா தாண்டும் திருவிழா
- கூனமநாயக்கனூர்
- தர்மகும்பட்டி
- கரூர் மாவட்டம் சேலை காளை
- குதித்தல்
- மாவத்தூர் ஊராட்சி
- கரூர்...
- பாரம்பரிய மாடு குதிக்கும் திருவிழா
- தின மலர்
*கரூர் மாவட்ட சலை எருது மாடு முதல் பரிசை தட்டி சென்றது
தோகைமலை : தரகம்பட்டி அருகே மாவத்தூர் ஊராட்சி கூனமநாயக்கனூரில் நடந்த மாடு மாலை தாண்டும் திருவிழாவில் கரூர் மாவட்ட சலை எருது மாடு முதல் பரிசு பெற்றது.
கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் தரகம்பட்டி அருகே மாவத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கூனமநாயக்கனூரில் வசிக்கும் கம்பலத்து நாயக்கர் சமூகத்தினருக்கு முள்ளிப்பாடி மந்தையில் கற்பக விநாயகர், மகா மாரியம்மன், முத்தாளம்மன், பகவதிஅம்மன் ஆகிய கோவில்கள் அமைந்து உள்ளது.
இந்த கோவிலில் மாலை தாண்டும் திருவிழா கடந்த ஆண்டு நடைபெற்றது.தொடர்ந்து இந்த ஆண்டுக்கான மாலை தாண்டும் திருவிழா நடத்துவதற்கு ஊர் முக்கியஸ்தர்கள் முடிவு செய்தனர். இதனை ஒட்டி கடந்த ஜூன் 25ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கப்பட்டது. அன்று முதல் இப்பகுதி பக்தர்கள் 8 நாள் விரதம் இருந்து முள்ளிப்பாடி மந்தையில் உள்ள கற்பக விநாயகர், மகா மாரியம்மன், முத்தாளம்மன், பகவதிஅம்மன் ஆகிய சாமிகளுக்கு தினமும் 3 கால சிறப்பு பூஜைகளை செய்து வழிபட்டு வந்தனர்.
இதனை தொடர்ந்து முதல் நாள் திருவிழாவில் மகா மாரியம்மன், முத்தாளம்மன், பகவதிஅம்மன் ஆகிய சாமிகளுக்கு கங்கையில் கரகம் பாலிக்கப்பட்டது. பின்னர் தாரை தப்பட்டை உருமி முழக்கத்துடன் சேர்வை ஆட்டம் மற்றும் வானவேடிக்கைகளுடன் சாமிகள் வீதி உலா வந்தது.2ம் நாள் திருவிழாவில் அம்மனுக்கு பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், அக்னி சட்டி எடுத்தல், மாவிளக்கு எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக்கடன்கள் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.
அன்று இரவு சேர்வை ஆட்டம், தேவராட்டம், கும்மிபாட்டு போன்ற பாரம்பரியமிக்க நிகழ்ச்சிகள் நடந்தது. 3ஆம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடவூர் ஜமீன்தார் மோகன்குமார் முத்தையா தலைமையில் மாலை தாண்டும் நிகழ்ச்சி நடந்தது.முன்னதாக திருச்சி, திண்டுக்கல், கரூர் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வருகை தந்த 14 மந்தையர்களுக்கு சந்திப்பு மற்றும் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மதியம் சாமிகளின் பூஜை கூடைகள் மற்றும் பூசாரிகளை அழைத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து கோவில் முன்பாக அனைத்து மந்தையின் சலை எருது மாடுகளுக்கு புண்ணிய தீர்த்தம் தெளிக்கப்பட்டது.
பிறகு தாரை தப்பட்டை உருமி முழங்க கோவில் எதிரே சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ள எல்லைசாமி கோவிலுக்கு சலை எருது மாடுகளை அழைத்து சென்றனர். அங்கு எல்லைசாமி கோவிலில் சிறப்பு அபிசேகம் செய்து அனைத்து சலை எருது மாடுகளுக்கும் புண்ணிய தீர்த்தம் தெளித்து மாலை ஓட்டத்தை தொடங்கி வைத்தனர்.அங்கிருந்து முள்ளிப்பாடி மந்தையில் அமைக்கப்பட்ட மாத்தால் ஆன எல்லை கோட்டை நோக்கி சுமார் 300 க்கும் மேற்பட்ட சலை எருது மாடுகள் ஓடி வந்தது. இதில் கரூர் மாவட்டம் நடுப்பள்ளம் தாதல்மாதா நாயக்கர் மந்தை மாடு முதலாவதாக ஓடி வந்து எல்லை கோட்டை அடைந்து வெற்றி பெற்றது.
இதேபோல் 2வதாக புதுக்கோட்டை மாவட்டம் சேமங்களம் அய்யாசாமி மந்தை மாடும், 3வதாக வீரப்பூர் அரண்மனையை சேர்ந்த பண்ணாரிட்டி சலை எருது மாடும் எல்லை கோட்டை அடைந்து வெள்ளை மாத்தை தாண்டி வெற்றி பெற்றது.இதில் வெற்றி பெற்ற மாடுகளுக்கு இவர்களின் சமூக வழக்கப்படி 3 கன்னி பெண்கள் வைத்திருந்த மஞ்சள் பொடியினை தூவி வரவேற்று, எழும்பிச்சை பழங்களை பாpசாக வழங்கப்பட்டது.
தொடர்ந்து மஞ்சள் பொடி வைத்திருந்த 3 கன்னி பெண்களை எல்லை கோட்டிலிருந்து தேவராட்டத்துடன் கோவிலுக்கு அழைத்து வந்து, சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். பின்னர் மகா மாரியம்மன், முத்தாளம்மன், பகவதிஅம்மன் சாமிகளுக்கு மஞ்சள் நீராட்டுடன் வழி அனுப்பி வைத்தனர். இந்த விழாவில் முள்ளிப்பாடி மந்தை நாயக்கர் சிவபெருமாள் நாயக்கர், ஊர்நாயக்கர் கணேஸ் பூசாரி, கோடங்கி நாயக்கர் ராஜு(எ)தம்மா நாயக்கர் உள்பட திருச்சி, திண்டுக்கல், கரூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
The post தரகம்பட்டி அருகே கூனமநாயக்கனூரில் பாரம்பரிய மாடு மாலை தாண்டும் திருவிழா appeared first on Dinakaran.