*எஸ்பி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் கடந்த காலங்களை போல் மாலை முதல் இரவு வரை ரோந்து பணிக்கு போலீசாரை ஈடுபடுத்த எஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த காலங்களில் அந்த அந்த போலீஸ் சரக எல்லையில் மாலை முதல் இரவு வரை போலீசார் பைக்கில் ரோந்து செல்வது வழக்கம். அப்போது தேவையில்லாமல் தெருக்களில் நிற்பவர்கள், மற்றும் தகராறில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.
போலீசார் ரோந்து வருவதால், பல குற்றசம்பவங்கள் தவிர்க்கப்பட்டது. இதுபோல் பஸ் நிலையங்களில் மப்டியில் போலீசார் ரோந்து செல்வார்கள். அவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை கண்காணித்து, அதிக நேரம் பஸ் நிலையத்தில் நிற்கும் நபர்களிடம் விசாரணை நடத்தி விரைவில் அவர்களது ெசாந்த ஊர்களுக்கு செல்ல அறிவுரை வழங்கி வந்தனர். இதனால் குமரி மாவட்டத்தில் குற்றசம்பவங்கள் குறைந்து இருந்தது.
தற்போது இளம் சிறார்கள் அதிக அளவு குற்றசம்பவங்களில் ஈடுபடும் போக்கு அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் வாகன சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. சாலை விதிகளை கடைபிடிக்காத நபர்களுக்கு அபராதம் விதிப்பதோடு, வழக்கும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. 18 வயது குறைந்தவர்கள் வாகனங்களை இயக்கினால் அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இதுபோல் பைக்கில் சாகசம் நிகழ்த்தி, அதனை சமூகவலை தளத்தில் பதிவேற்றம் செய்யும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நடவடிக்கை ஒருபுறம் இருந்தாலும், போலீசார் மாலை முதல் இரவு நேரம் வரை வாகன ரோந்து செல்வது இல்லாமல் உள்ளது. இதனால் நகர புறங்களில் உள்ள தெருக்கள், கிராமபுறங்களில் குற்றசம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை குறைக்க கண்டிப்பாக மாலை முதல் இரவு வரை போலீசார் பைக்கில் ரோந்து செல்வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
குமரி மாவட்டத்தில் கடந்த காலங்களில் கோஷ்டி மோதல் சம்பந்தமாக கொலைகள் நடந்து வந்தது. ஆனால் தற்போது போதைக்கு அடிமையாகி பல குற்றசம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. மாவட்ட போலீசாரின் ரோந்து பணி தற்போது இல்லாமல் ஒரு முக்கியமான ஜங்சன் பகுதியில் காலை முதல் இரவு வரை போலீசார் நின்றுக்கொண்டு சாலை விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது அபராதம், வழக்குபதிவு செய்து வருகின்றனர். இதனால் மாலை முதல் இரவு நேரம் வரை செல்லும் ரோந்து பணி இல்லாமல் உள்ளது. கடந்த காலங்களில் போலீசார் பைக்கில் ஒரே குறிப்பிட்ட நேரத்தில் வராமல் மாறுபட்ட நேரங்களில் ரோந்து வருவார்கள். இதனால் இரவு நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே வந்து தேவையில்லாத தகராறில் ஈடுபடும் சம்பவங்கள் இல்லாமல் இருந்தது.
ஆனால் தற்போது ரோந்து பணி இல்லாததால், இரவு நேரத்தில் முக்கியமான தெரு, வீதிகளில் இளைஞர்கள் ஒன்று கூடி மது அருந்துவது போன்ற சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். போதை அதிகமாகும்போது அடிதடி, தகராறும் ஏற்பட்டு வருகிறது. மேலும் அந்த வழியாக பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. போலீசார் பைக்கில் ரோந்து பணியை மேற்கொள்ளும் போது, இளைஞர்கள் ஒன்று கூடி மது அருந்துவது, குற்றச்செயல்களில் ஈடுபடுவது குறையும்.
மேலும் மாலையில் பள்ளி விடும்நேரத்தில் பள்ளிகளின் அருகே உள்ள தெருக்களில் இளைஞர்கள் ஒன்று கூடி, பள்ளியில் இருந்து வரும் மாணவிகளை கிண்டல் செய்யும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால் பள்ளி விடும் நேரத்தில் இருந்து இரவு நேரம் வரை தேவைக்கு ஏற்ப அந்தந்த காவல்நிலைய பகுதிகளில் உள்ள இடங்களில் பைக்கில் போலீசார் ரோந்து செல்ல மாவட்ட எஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றனர்.
The post குமரி மாவட்டத்தில் மாலை நேர ரோந்தில் போலீசார் ஈடுபடுவார்களா? appeared first on Dinakaran.