×

சென்னை ரயில்வே கோட்டத்தில் தண்டவாள பராமரிப்பு, பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆய்வு

சென்னை: தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என் சிங், சென்னை ரயில்வே கோட்டம் மற்றும் திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டம் ஆகியவற்றில் நடைபெறும் பல்வேறு கட்டுமானப் பணிகள், ரயில்வே பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ய திட்டமிட்டிருந்தார். அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து நேற்று காலை 9.35 மணிக்குஒரு பிரத்யேக ஆய்வு ரயிலில் புறப்பட்டார். இந்த ரயில் சென்றபோது, ரயில் தண்டவாளம் பராமரிப்பு, சிக்னல் தொழில்நுட்ப மேம்பாடு போன்ற பாதுகாப்பு அம்சங்களை பொதுமேலாளர் ஆய்வு செய்தார். அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தின் கீழ் மாம்பலம், கிண்டி, பரங்கிமலை ஆகிய நிலையங்களில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன.

இதுதொடர்பான விவரங்களை கேட்டறிந்தார். தொடர்ந்து, தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைபெறும் மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டார். பயணிகளுக்காக செய்யப்படும் வசதிகள், ரயில்வே பொறியியல் பணி உட்பட பல்வேறு பணிகளைஆய்வு செய்தார். தொடர்ந்து, செங்கல்பட்டு ரயில் நிலையத்துக்கு சென்று, அங்கு அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தின் கீழ் நடைபெறும் மறுசீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். மேலும், ரயில் பயணிகளுக்கு செய்யப்படும் வசதிகளைகேட்டறிந்தார். எல்லா பணிகளை யும் குறித்த காலத்துக்குள் முடிக்க அறிவுறுத்தினார். தொடர்ந்து, விழுப்புரம், சிதம்பரம், திருச்சிராப்பள்ளி ஆகிய நிலையங்களில் ஆய்வு செய்ய புறப்பட்டு சென்றார்.

இந்த ஆய்வின் போது, சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா உட்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் இருந்தனர். இந்த ஆய்வு குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: பயணிகளுக்கான வசதிகள் மற்றும் பாதுகாப்புக்கு ரயில்வே நிர்வாகம் முக்கியத்துவம் அளித்து வருகிறது. அந்த வகையில், ரயில்வே தண்டவாளப் பராமரிப்பு, சிக்னல் தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றை பொதுமேலாளர் ஆய்வு செய்தார். ரயில் தண்டவாளத்தை மேம்படுத்தி ரயில் வேகத்தை அதிகரித்தல் முக்கிய நோக்கமாக இருப்பதால், சிக்னல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தல் அவசியமாகிறது. இதை பொதுமேலாளர் வலியுறுத்தினார். பணிகளை குறித்த காலத்தில் முடிக்கவும் அறிவுறுத்தினார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post சென்னை ரயில்வே கோட்டத்தில் தண்டவாள பராமரிப்பு, பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : General Manager ,Southern Railway ,Chennai Railway Fort ,Chennai ,R. N Singh ,Chennai Railway Station ,Trichirapalli Railway Station ,Chennai Lhampur ,
× RELATED விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு...