×
Saravana Stores

திருப்பத்தூர் அருகே கணவரின் தகாத உறவால் குழந்தையை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய் கைது: ராணுவ வீரரிடம் போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை: தகாத உறவால் ஏற்பட்ட தகராறில், குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற தாய், கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து அவரது கணவரான ராணுவ வீரரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த கொரட்டி பகுதியை சேர்ந்தவர் கணபதி (35). இவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகரை சேர்ந்த வினோதினிக்கும்(29) 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களது மகன் கிஷோர்(4). இந்நிலையில், கணபதிக்கும் அதே பகுதியை சேர்ந்த சத்யா என்ற பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கணபதி ராணுவத்திலிருந்து 45 நாள் விடுமுறையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கணபதியும், சத்யாவும் ஒன்றாக இருக்கும் வீடியோ வினோதினிக்கு கிடைத்துள்ளது.

இதனால் அந்த செல்போனை வாங்குவது சம்பந்தமாக நேற்று முன்தினம் இரவு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ராணுவ வீரர் கணபதி, மனைவியை சரமாரியாக தாக்கினாராம். இதனால் மனமுடைந்த வினோதினி 4 வயது குழந்தையுடன் தங்களது விவசாய நிலத்திற்கு நேற்று காலை சென்றார். அங்குள்ள கிணற்றில் குழந்தை கிஷோரை வீசிவிட்டு தானும் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அக்கம் பக்கத்தினர் வந்து வினோதினியை காப்பாற்றினர். குழந்தையை சடலமாக மீட்டனர்.

இதையடுத்து வினோதினி பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். குடும்பத்தினர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை முடிந்ததும் அவரை திருப்பத்தூர் கிராமிய போலீசார் கைது செய்தனர். மேலும் ராணுவ வீரர் கணபதியை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருப்பத்தூர் அருகே கணவரின் தகாத உறவால் குழந்தையை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய் கைது: ராணுவ வீரரிடம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Tirupathur ,Jollarpet ,Korati ,Tiruppathur, Tiruppathur ,Tiruppathur ,Dinakaran ,
× RELATED போலி நிறுவனம் நடத்தி மோசடி ரூ.26.40 லட்சம்...