பண்ருட்டி: கள்ளக்குறிச்சி விஷ சாராய பலிக்கு காரணமான முக்கிய குற்றவாளி புதுச்சேரி மாதேஷ், 2 ஆயிரம் லிட்டர் மெத்தனாலை பண்ருட்டி பெட்ரோல் பங்க் டேங்கில் பதுக்கி வைத்தது அம்பலமானது. இதையடுத்து அந்த பங்கிற்கு சீல் வைத்த சிபிசிஐடி போலீசார் மெத்தனாலை பரிசோதனைக்காக சென்னைக்கு சாம்பிளுக்கு அனுப்பி உள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷசாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான மெத்தனால் வியாபாரி புதுச்சேரி மடுகரையை சேர்ந்த மாதேஷ், கள்ளக்குறிச்சி பிரபல சாராய வியாபாரி கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, சின்னதுரை உள்பட 21 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் முக்கிய குற்றவாளி புதுச்சேரி மடுகரை மாதேஷ், பிரபல சாராய வியாபாரி கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ் உள்பட 11 பேரை சிபிசிஐடி போலீசார் காவல் விசாரணைக்கு எடுத்து விசாரணை நடத்தினர். 3 நாட்கள் விசாரணை முடிந்ததும் அவர்கள் பலத்த பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறையில் நேற்று முன்தினம் அடைக்கப்பட்டனர்.
இச்சம்பவத்தில் மெத்தனால் கடத்துவதற்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியான புதுச்சேரி மடுகரையை சேர்ந்த மாதேஷ் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:
கடந்த 4 மாதங்களாக மெத்தனாலை வாங்கி விற்பனை செய்துவந்தேன். கள்ளக்குறிச்சி அகரகோட்டாலம், செம்படாக்குறிச்சி, மாதவச்சேரி, சேஷசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மெத்தனால் வாங்கி சப்ளை செய்துள்ளேன். சென்னையில் உள்ள கெமிக்கல் கம்பெனி உரிமையாளர்கள் பன்சிலால், கவுதம் சந்த் ஆகியோரிடம் 1 பேரல் ₹11 ஆயிரம் என மொத்தம் 19 பேரல் வாங்கினேன். ஒரு பேரல் மெத்தனாலை நாற்பதாயிரத்திற்கு விற்பனை செய்தேன். முதல்கட்டமாக கள்ளக்குறிச்சிக்கு விற்பனை செய்து அது வெற்றிபெற்றால் மற்ற மாவட்டங்களுக்கும் விற்பனையை அதிகரிக்க பெரிய அளவில் திட்டமிட்டிருந்தேன். இதற்காக பெரிய நெட்வொர்க் வைத்து வேலை செய்துவந்தேன்.
ஆனால், முதல் விற்பனையே கள்ளக்குறிச்சியில் தோல்வியை தழுவி உயிரிழப்பு அதிகமானதால் மற்ற மாவட்டங்களுக்கு விற்பனை செய்ய முடியவில்லை. அதிக சொத்து சேர்த்து சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற ஆசையால் தான் திட்டமிட்டு மெத்தனால் விற்பனையில் ஈடுபட்டேன். ஆனால், அது விஷ சாராயமாக மாறியதால் நான் நினைத்தது நடக்க முடியாமல் போய்விட்டது. பண்ருட்டியில் உள்ள பெட்ரோல் பங்க் டேங்கரில் மெத்தனாலை பதுக்கி வைத்தேன். இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இதையடுத்து நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த வீரப்பெருமாநல்லூர் என்ற ஊரில் பழனிவேல் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க்கை 3 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் நடத்த மாதேஷ் அனுமதி பெற்றிருந்தது தெரியவந்தது.
மாதேஷ் சென்னையில் இருந்து வாங்கிய மெத்தனாலை கள்ளக்குறிச்சிக்கு அனுப்பிவிட்டு மீதமுள்ள 2 ஆயிரம் லிட்டர் மெத்தனாலை இந்த பெட்ரோல் பங்கில் தரைக்கு அடியில் உள்ள டேங்கில் ரகசியமாக பதுக்கி வைத்திருந்த விஷயமும் அம்பலமானது. இதை தொடர்ந்து சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான போலீசார் வீரப்பெருமாநல்லூரில் உள்ள அந்த பெட்ரோல் பங்கிற்கு நேற்று முன்தினம் இரவு அதிரடியாக சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது பெட்ரோல் பங்கில் உள்ள டேங்கில் மெத்தனால் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் அந்த மெத்தனாலை சிபிசிஐடி போலீசார் சாம்பிள் எடுத்து பரிசோதனைக்காக சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். இதையொட்டி சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்கிற்கு சிபிசிஐடி போலீசார் அதிரடியாக சீல் வைத்தனர். மேலும் அந்த பெட்ரோல் பங்க் பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பெட்ரோல் பங்க் உரிமையாளர் பழனிவேலுக்கு சம்மன் அனுப்பி அவரை விசாரணைக்கு அழைக்கவும் சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
5 பேர் மீது குண்டாஸ்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த தகரை கிராமத்தை சேர்ந்த பழனிசாமி (35). சங்கராபுரம் வட்டம் விரியூர் கிராமத்தை சேர்ந்த இருதயராஜ் (39). இருவரும் கள்ளச்சாராயம் விற்பனை செய்யும்போது சின்னசேலம் மற்றும் சங்கராபுரம் போலீசார் கைது செய்தனர். கடந்த 30.5.2024ம் தேதி உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே புதுச்சேரியை சேர்ந்த அண்ணாதுரை(46), சக்திவேல்(42), குமார்(எ) சொட்டைகுமார்(55) ஆகியோர் போலியாக தமிழ்நாடு அரசு முத்திரையுடன் மதுபானத்தை தயாரித்து விற்பனை செய்ய புதுச்சேரியில் இருந்து கடத்தி வரும்போது உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
5 பேர் மீதும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் நிலையத்தில் கள்ளச்சாராயம் கடத்தல் மற்றும் விற்பனை செய்த பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனால் 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கள்ளக்குறிச்சி ஆட்சியர் பிரசாந்த் உத்தரவிட்டார். அதன்படி 5 பேரையும் போலீசார் ைகது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
மெத்தனால் வழங்கிய ஐதராபாத் கம்பெனிகள்
கைதான மாதேஷ் மெத்தனாலை வாங்கிய சென்னை மாதவரம் பகுதி கெமிக்கல் கம்பெனி உரிமையாளர்கள் பன்சிலால், கவுதம் சந்த் ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் ஐதராபாத்தில் உள்ள 4 கம்பெனியில் இந்த மெத்தனாலை வாங்கியதாக கூறியுள்ளனர். இதையடுத்து அந்த 4 கம்பெனிக்கும் சம்மன் அனுப்ப சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
1 பேரல் மெத்தனாலை ₹11 ஆயிரத்துக்கு வாங்கி ₹40 ஆயிரத்துக்கு விற்பனை செய்தேன். முதல்கட்டமாக கள்ளக்குறிச்சிக்கு விற்பனை செய்து அது வெற்றிபெற்றால் மற்ற மாவட்டங்களுக்கும் விற்பனையை அதிகரிக்க பெரிய அளவில் திட்டமிட்டிருந்தேன்.
The post கள்ளக்குறிச்சி விஷ சாராய பலி சம்பவம்; பணத்தாசையால் 2,000 லி. மெத்தனாலை பெட்ரோல் பங்கில் பதுக்கிய மாதேஷ்: சீல் வைப்பு appeared first on Dinakaran.