டெல்லி: சிவன் படத்தின் முன்பு பொய் பேசுகிறார் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் என்று ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்தார். இதற்கு இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. ராணுவத்தில் வீர மரணம் அடைந்த அக்னிவீரர் அஜய் சிங்கிற்கு ரூ.1 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக மரணமடைந்த அவரது தந்தை, உண்மை நிலையை கூறும் வீடியோவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘ராணுவத்தில் வீர மரணமடைந்த அக்னிவீரருக்கு நிதியுதவி அளிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பொய் சொல்லியுள்ளார். கடவுள் சிவன் புகைப்படம் முன்பு ராஜ்நாத்சிங் பொய் பேசியுள்ளார்.
ராணுவத்தில் வீர மரணமடைந்த அஜய் சிங்கின் தந்தையே, ராஜ்நாத் சிங்கின் பொய்யை அம்பலப்படுத்தியுள்ளார். பாதுகாப்பு துறை அமைச்சர் நாடாளுமன்றத்திலும், நாட்டு மக்களிடமும், ராணுவத்திடமும், அஜய் சிங் குடும்பத்திடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் பேசியுள்ள அஜய் சிங்கின் தந்தை, ‘அக்னிவீர் திட்டம் நிறுத்தப்பட வேண்டும் என்றும் ராணுவத்தில் வழக்கமான முறையில் வீரர்களை சேர்க்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார். ராகுல்காந்தியின் குற்றச்சாட்டிற்கு இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. அதில் அஜய் சிங் குடும்பத்திற்கு ஏற்கனவே ரூ.98.39 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை சரிபார்ப்பிற்கு பின்பு மீதமுள்ள ரூ.67 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் குறித்து ராகுல் குற்றச்சாட்டுக்கு ராணுவம் விளக்கம் appeared first on Dinakaran.