நன்றி குங்குமம் தோழி
‘‘பெண் தொழில்முனைவோர் ஆவதுதான் எனது ஆகச் சிறந்த லட்சியமாக இருந்தது’’ என்கிறார் சென்னை சூளைமேட்டை சேர்ந்த விஷ்ணு ப்ரியா. அவர்கள் ஏரியாவின் லோக்கல் சேனல் ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தன் கெரியரை துவங்கினார். பிறகு கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை பார்த்தவர், அதனைத் தொடர்ந்து பல நிகழ்ச்சியினையும் நடத்தியுள்ளார். அதில் கிடைத்த அனுபவம் மூலம் ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் அமைத்து அதில் பல நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறார். தன் தொழிலை வெற்றிகரமாக நடத்தி வரும் விஷ்ணு ப்ரியா தொழில் மேலாண்மை குறித்த சுவாரஸ்யமான தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
ஈவென்ட் மேனேஜ்மென்ட் மீதான ஆர்வம்?
நான் கல்லூரியில் இளங்கலை படித்துக் கொண்டிருந்த போதே பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் ஆர்வம் கொண்டிருந்தேன். அதன் பின்னர் ஒரு லோக்கல் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வேலை பார்த்து வந்தேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்ததும், எம்.பி.ஏவில் சேர்ந்தேன். அந்த துறையில் நான் படிக்கும் போதே எனக்கு ஒரு சிறந்த பெண் தொழில்முனைவோராக வரவேண்டும் என்கிற ஆசை உள்ளூர இருந்தது.
பின்னர் படிப்பை முடித்ததும் சில கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்து வந்தேன். அப்போதும் அந்த கார்ப்பரேட் நிறுவனங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் என்னுடைய தனிப்பட்ட ஆர்வத்தினால், அந்த நிகழ்ச்சியினை நான் நடத்தி தொகுத்தும் வழங்கி வந்தேன். அதன் பிறகு அரோரா ஃபவுண்டேஷன் ஆரம்பித்து முழுவதும் பெண் தொழில் முனைவோராக மாறிவிட்டேன். தற்போது எங்கள் நிறுவனத்தின் மூலம் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன். இந்த தொழிலில் எனக்கு ஏறக்குறைய பதினாறு வருட அனுபவங்கள் இருக்கிறது.
ஈவென்ட் மேனேஜ்மென்ட்?
பல்வேறு நிகழ்ச்சிகளை அமைத்துத் தருவது, நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குவது, குறிப்பிட்ட நேரத்துக்குள் நிகழ்ச்சிகளை முடித்துக் கொடுப்பது, மிகவும் கிரியேட்டிவ்வாக ஒரு விஷயத்தை செய்வது, நம்மை சுற்றியிருப்பவர்களை சிரிக்க, யோசிக்க, பொழுதுபோக்க வைப்பது, வெவ்வேறு விதமான மனிதர்களை சந்தித்துப் பேசுவது என பல வேலைகள் உண்டு. சுருக்கமாக சொல்லப்போனால், ஒரு நிகழ்ச்சியின் ஆரம்பம் முதல் முடிவு வரை அமைத்து தர வேண்டும். இதில் கார்ப்பரேட் நிறுவனங்கள் சார்ந்த நிகழ்ச்சிகள் மட்டுமில்லாமல் பிறந்தநாள் நிகழ்ச்சிகள், புத்தாண்டு கொண்டாட்டங்கள், திருமணத்தில் நடைபெறும் சங்கீத் மற்றும் மெஹந்தி பார்ட்டிகள், பிரைவேட் பார்ட்டிகள் என பலவற்றையும் ஏற்பாடு செய்து தருகிறோம்.
அதில் அவர்கள் கேட்கும் விஐபிகளையும் விருந்தினர்களாக வரவழைத்து தருவோம். பல அரசியல் துறை பிரபலங்கள், திரைத்துறை பிரபலங்கள், தொழிலதிபர்களுக்கும் தனிப்பட்ட விழாக்களையும், பார்ட்டிகளையும் நடத்தி தருகிறோம். சில சமயம் நிகழ்ச்சிக்கான அலங்காரம் மற்றும் உணவும் அவர்கள் விரும்பினால் அதனையும் ஏற்பாடு செய்து தருகிறோம்.
நிகழ்ச்சியை எவ்வாறு அமைக்க வேண்டும்?
ஒரு நிகழ்ச்சியை சக்சஸ்ஃபுல்லா நடத்துவது என்பது எளிதான வேலை கிடையாது. நமது முழு ஈடுபாட்டையும் உழைப்பையும் நூறு சதவீதம் காண்பித்தால் மட்டுமே அதில் ஓரளவாவது வெற்றி பெற முடியும். என்னுடைய பல வருட அனுபவம்தான் எனக்கு இப்போது கைகொடுக்கிறது. நான் தொகுப்பாளராக வேலை பார்த்த காலத்தில் இருந்தே நான் சந்தித்த பல்வேறு பிரபலங்கள் மற்றும் நபர்களின் தொடர்பினை பாதுகாத்து வைத்திருந்தேன்.
இந்தத் தொழிலை பொறுத்தவரை தொடர்புகள்தான் மிகவும் முக்கியம். அப்போதுதான் ஒரு நிகழ்ச்சிக்கு யாரையெல்லாம் விருந்தினர்களாக அழைக்க வேண்டும், எவ்வளவு பேர் வருவார்கள், அவர்களுக்கான மற்ற வசதிகள் குறித்து முன்பே திட்டமிட முடியும். விருது பெறுபவர்கள், விருது கொடுப்பவர்கள் குறித்த தகவல்களை மிகுந்த கவனத்துடன் தயாரிக்க வேண்டும்.
அதில் சில தவறுகள் ஏற்பட்டாலும் அவர்களுக்கு மட்டுமில்லை, நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கும் மனச்சங்கடம் ஏற்படும். அதே சமயம் பரிசுகள், விருதுகள் என்ன கொடுக்கலாம் என்பதைப் பற்றியும் நாம் முன்கூட்டியே நிகழ்ச்சி அமைப்பாளரிடம் கேட்டு முடிவு செய்து அதனை தயாராக வைத்திருக்க வேண்டும். ஒரு நிகழ்ச்சி நடைபெற எந்த வித குழப்பமும் இல்லாமல் அனைத்தும் முன்னேற்பாடாக செய்திருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை ஒரு விழாவிற்கு குறைந்தபட்சம் மூன்று மாதங்களாவது முன் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டால் அந்த விழா மிகச் சிறப்பாக அமையும்.
மகளிர் தின விருது?
பொதுவாகவே பெண்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்கிற எண்ணங்கள் எப்போதுமே இருக்கும். அதனால் மகளிர் தினத்திற்காக பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்த பெண்களை தேர்வு செய்து அவர்களை கௌரவித்தால் என்ன என்கிற எண்ணம் தோன்றியது. அப்படி தோன்றியதுதான் பொன் மகள் விருது. பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பிரபல பெண்கள் ஐம்பது பேரை தேர்வு செய்தோம்.
அவர்களுக்கு பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்த பிரபலங்கள் கையால் விருது வழங்க வேண்டும் என்று யோசித்து அவர்களையும் தேர்வு செய்தேன். அந்த விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதில் பட்டியலில் இல்லாத சில பெண்களுக்கு அந்த நொடியில் தேர்வு செய்து அவர்களுக்கும் விருது கொடுத்து கவுரவித்தேன். இன்னும் இதுபோல நிறைய செய்ய வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அடி எடுத்து வைக்கிறோம். எதிர்காலத்தில் செய்ய இன்னமும் நிறைய திட்டங்கள் கைவசம் உள்ளது.
குரு சிஷ்யா?
பெண்களுக்கு மட்டும்தான் விருதா? எங்களுக்கு கிடையாதா என பல ஆண்களும் கேட்டு வைத்தனர். அப்படித்தான் குரு சிஷ்யா விருது வழங்கினால் என்ன என்று தோன்றியது. எந்த ஒரு துறையிலும் சாதனை படைக்க நிச்சயமாக அவர்களுக்கு குரு மிகவும் உறுதுணையாக இருந்திருப்பார். தாய், தந்தையருக்கு பிறகு நாம் நன்றாக இருக்க வேண்டும் என அக்கறை கொள்பவர்கள் குருவை தவிர வேறு யாராக இருக்க முடியும். எனவேதான் குருவை பெரிதும் கௌரவிக்க விரும்பினோம். அப்படி உருவானதுதான் இந்த குரு சிஷ்யா விருது. அதில் வந்திருந்த குரு மற்றும் சிஷ்யர்கள் என அனைவரையும் கவுரவித்து அவர்களுக்கு விருதுகள் கொடுத்து அசத்தினோம்.
எதிர்கால திட்டங்கள்?
எனக்கு நகைச்சுவை என்றால் ரொம்ப பிடிக்கும். எனது அடுத்த நிகழ்ச்சி கட்டாயம் நகைச்சுவை சார்ந்ததாகத்தான் இருக்கும். தற்போது அதற்கான ஏற்பாடுகளை முழு தீவிரமாக செய்து வருகிறேன்.அதில் நகைச்சுவை சார்ந்த ஆளுமைகள் பலர் விருந்தினராக வர இருக்கிறார்கள். மேலும் நகைச்சுவை சார்ந்த பல வித்தகர்களுக்கு பல்வேறு விருதுகளையும் கௌரவங்களையும் வழங்க வேண்டும் என்பதும் எங்களது விருப்பம். அதற்கான நிறைய முன்னேற்பாடுகள் தகுந்த முறையில் செய்யப்பட்டு வருகிறது.
நிறைய தனியார் பார்ட்டிகள் மற்றும் விழாக்கள் நடத்திய அனுபவங்கள் எங்களுக்கு பெரிதும் உதவி வருகிறது. அதே போன்று பல்வேறு துறைகளில் சாதிக்க துடிக்கும் அல்லது சாதித்து முடித்திருக்கும் நிறைய பெண் ஆளுமைகளை அழைத்து விருந்தளித்து அவர்களை கௌரவப்படுத்த வேண்டும் என்பதும் எதிர்கால திட்டங்களில் ஒன்று. அதன் மூலம் நிறைய பெண் தொழில்முனைவோருக்கு தொழிலில் முன்னேற ஒரு ஊக்கமும் உந்து சக்தியும் அதிகம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. அதனால்தான் பெண்களை முன்னெடுத்து மகிழ்கிறோம்.
தற்போது சென்னையில் எனது நிறுவனம் இயங்கி வருகிறது. இதனைத் தொடர்ந்து மதுரை, கோவை போன்ற நகரங்களுக்கு இதனை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்க இருக்கிறேன். என்னுடைய இந்த வளர்ச்சிக்கு என் குடும்பத்தினர் கொடுத்த ஆதரவுதான் என்னுடைய முழு பலம் என்று சொல்வேன். அவர்கள் இல்லாமல் என்னால் இவ்வளவு சிறப்பாகவும் சுதந்திரமாகவும் எனது பணிகளை செய்திருக்க முடியாது.
தொழில் துவங்க இருக்கும் பெண்களுக்கான அட்வைஸ்?
பெண்கள் நினைத்தால் எந்த தொழிலிலும் சிறப்பாக சாதிக்க முடியும். நமக்கு விருப்பமும் ஆர்வமும் இருக்கும் தொழிலில் கடுமையான உழைப்பினை கொடுத்தால் அந்த துறையில் கண்டிப்பாக சக்சஸ் செய்ய முடியும். ஈவென்ட் மேனேஜ்மென்ட் தொழிலை பொறுத்தவரை வியாபார தொடர்புகள், பேச்சுத் திறமை, சமயோசித உத்திகள், சூழலை சமாளிக்கும் திறன் இருத்தல் அவசியம். பெண்கள் தங்களது கம்ப்ர்ட் ஜோனை விட்டு வெளியேறி துணிந்து இறங்குங்கள். சவால்கள் நிறைந்த எத்துறையிலும் வெற்றிக் கனிகளை மிகச் சுலபமாக பறித்து விடலாம் என்கிறார் ஈவென்ட் மேனேஜ்மென்ட் துறையில் நிறைய சாதிக்கும் கனவுகளை நெஞ்சில் சுமந்து கொண்டிருக்கும் விஷ்ணு ப்ரியா.
தொகுப்பு: தனுஜா ஜெயராமன்
The post தொகுப்பாளர் முதல் பெண் தொழில்முனைவோர் வரை! appeared first on Dinakaran.