×

இரட்டை கொலை வழக்கு : 3 பேருக்கு இரட்டை ஆயுள்

தூத்துக்குடி: பெண் உள்ளிட்ட இருவரை கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சிவகளையை சேர்ந்த விக்னேஷ்ராஜா(26)வும், ஏரலை சேர்ந்த சங்கீதாவும் பழகி வந்துள்ளனர். இதுதொடர்பாக சங்கீதாவின் சகோதரர் முத்துராமலிங்கம்(24), உறவினர்கள் முத்துசுடர்(23), அருணாசலம்(38) ஆகியோருக்கும் விக்னேஷ் ராஜாவுக்கும் கடந்த 17-6-20ல் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது.

இருப்பினும் சங்கீதாவுக்கே விக்னேஷ்ராஜாவை திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனை விக்னேஷ்ராஜாவின் பெற்றோர் ஏற்கவில்லை. இதனால் விக்னேஷ்ராஜா, மனைவியின் வீட்டில் வசித்து வந்தார். அப்போது அவர்களுக்குள் குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் விக்னேஷ்ராஜாவின் குடும்பத்தினர் அவரை மனைவி சங்கீதாவுடன் தங்கள் வீட்டுக்கு வருமாறும், 40 பவுன் நகைகள் வாங்கி வருமாறும் தெரிவித்துள்ளனர்.
இதையறிந்து ஆத்திரமடைந்த முத்துராமலிங்கம், முத்துசுடர், அருணாசலம் ஆகிய மூவரும் சிவகளை பஞ்சாயத்து அலுவலகம் அருகில் கடந்த 2.7.20 அன்று மாலை விக்னேஷ்ராஜாவை செல்போனில் அழைத்துள்ளனர். இதையடுத்து விக்னேஷ்ராஜா, அண்ணன் ஆத்திமுத்துவுடன் அங்கு சென்றுள்ளார்.

அப்போது முத்துராமலிங்கம் உள்ளிட்ட மூவரும் சேர்ந்து விக்னேஷ்ராஜாவை அரிவாளால் வெட்டினர். தடுக்க முயன்ற அருண்மகேஷ்(26) என்பவரையும் வெட்டினர். இதில் அவர் உயிரிழந்தார்.பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்ற அவர்கள், விக்னேஷ்ராஜாவின் வீட்டுக்கு சென்று விக்னேஷ்ராஜாவின் தாய் முத்துப்பேச்சியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பினர்.

இதுகுறித்து ஏரல் போலீசார் வழக்கு பதிந்து முத்துராமலிங்கம் உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனர். இந்த வழக்கை தூத்துக்குடி 2வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி உதயவேலவன் விசாரித்து, முத்துராமலிங்கம், முத்துசுடர், அருணாசலம் ஆகிய 3 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

The post இரட்டை கொலை வழக்கு : 3 பேருக்கு இரட்டை ஆயுள் appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Vigneshraja ,Sivagarhi, Thoothukudi district ,Sangeetha ,Eral ,Muthuramalingam ,Muthusudar ,
× RELATED தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணி