×
Saravana Stores

தமிழகத்தில் ஜிகா வைரஸ் தீவிர கண்காணிப்பு; மக்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை: பொது சுகாதாரத்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் ஜிகா வைரஸ் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதால் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் இரண்டு கர்ப்பிணிகள் உள்பட 7 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஜிகா வைரஸ் தொடர்பாக எச்சரிக்கையுடன் இருக்கும்படி அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் ஜிகா வைரஸ் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது:
ஜிகா வைரஸ் ஏடிஸ் வகை கொசு மூலம் பரவும், எனவே கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக அந்தந்த மாவட்டத்தில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 22,800 ஊழியர்கள் (domestic breeding checkers) பணியாற்றி வருகின்றனர். அதில் ஊரக பகுதிகளில் 11,705 பணியாளர்கள், நகர் பகுதிகளில் 11,095 பணியாளர்கள் தீவிரமாக கொசு ஒழிப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

மேலும் வழக்கத்திற்கு மாறாக பாதிப்பு இருந்தால் அங்கு நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது வரை எந்த பாதிப்பும் இல்லை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே மக்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழகத்தில் ஜிகா வைரஸ் தீவிர கண்காணிப்பு; மக்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை: பொது சுகாதாரத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Public Health ,CHENNAI ,Public Health Department ,Maharashtra ,
× RELATED தமிழகத்தில் பொன்னுக்கு வீங்கி...