லிப்சிக்: யூரோ கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதியில் விளையாட துருக்கி அணி தகுதி பெற்றது. காலிறுதிக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரியா (25வது ரேங்க்) – துருக்கி (42வது ரேங்க்) அணிகள் மோதின. டி பிரிவில் முதலிடம் பிடித்த ஆஸ்திரியா, எப் பிரிவில் 2வது இடம் பிடித்த துருக்கி மோதிய இந்த ஆட்டம் ஜெர்மனியின் லிப்சிக் நகரில் நடைபெற்றது.
தரவரிசைக்கு ஏற்ப ஆஸ்திரியா அணி ஆதிக்கம் செலுத்தும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், தொடங்கிய ஒரு நிமிடத்திற்குள் துருக்கி கோலடித்து அசத்தியது. துருக்கி அணிக்கு கிடைத்த கார்னர் வாய்ப்பை ஆர்தா குலெர் கோல் பகுதிக்கு அடித்தார். அதை ஆஸ்திரிய வீரர் கிறிஸ்டோப் பவும்கார்ட்னர் தடுத்து நடுகளத்துக்கு விரட்ட முயன்றபோது அது சக வீரர் கெவின் டன்சோ காலில் பட்டு கோல் கீப்பர் பேட்ரிக் பென்ஸ் கைக்கு சென்றது. அவர் கோல் கம்பத்துக்குள் உள்ளே நின்று கையால் தள்ளிவிட்டார். அதுவே கோலாகி இருக்க வேண்டும். அதை நடுவர் கவனிக்கவில்லை. எனினும், துருக்கி வீரர் மெரிஹ் டெமிரல் பந்தை மடக்கி அடித்து கோலாக்கினார்.
அதனால் துருக்கி 1-0 என முன்னிலை பெற்றது. இடைவேளை வரை அதே நிலை நீடித்தது. 2வது பாதியில் கோலடிக்க இரு அணிகளும் கூடுதல் வேகம் காட்டின. 59வது நிமிடத்தில் துருக்கிக்கு 2வது வாய்ப்பு கிடைத்தது. அந்த கார்னர் வாய்ப்பையும் மீண்டும் அடிக்க வந்த ஆர்தா குலெர் சரியாக கோல் பகுதிக்குள் அனுப்பினார். அங்கு நின்று கொண்டிருந்த டெமிரல் எகிறிக் குதித்து தலையால் முட்டி தனது 2வது கோலை வலைக்குள் திணிக்க… துருக்கி 2-0 என முன்னிலையை அதிகரித்தது.
ஆஸ்திரியாவுக்கு 66வது நிமிடத்தில் கிடைத்த கார்னர் வாய்ப்பை மார்செல் சபிட்சர் கோல் பகுதிக்கு மேலாகப் பறக்கவிட, ஸ்டீஃபன் போஷ் அழகாக தலையால் முட்டி கோல் பக்கம் திசை திருப்பினார். அதை விரைந்து வந்த மைக்கேல் கிரிகோரிட்ச் கோலாக மாற்ற… ஆட்டம் விறுவிறுப்பானது.
அதன் பிறகு 2 அணிகளும் முட்டி மோதியும் கோலடிக்கும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. கடைசி நிமிடத்தில் ஆஸ்திரியாவின் கிறிஸ்டோப் பவும்கார்ட்னரின் அற்புதமான கோல் முயற்சியையும் துருக்கி கோல் கீப்பர் மெர்ட் குனாக் அழகாக தடுத்துவிட்டார். அதேபோல் கடைசி நொடியில் கிடைத்த கார்னர் வாய்ப்பும் வீணாக, துருக்கி 2-1 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில் நெதர்லாந்து அணியின் சவாலை சந்திக்கிறது.
The post யூரோ கோப்பை கால்பந்து; காலிறுதியில் துருக்கி appeared first on Dinakaran.