சென்னை: ஆப்பிரிக்க பெண் ஒருவருக்கு மூளையில் உள்ள கட்டியை கிரானியோட்டமி செயல்முறை மூலம் அகற்றி காவேரி மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. 69 வயதான ஆப்பிரிக்க பெண்ணுக்கு சுப்ரா ஆர்பிட்டல் கிரானியோட்டமி (மிகக் குறைவான ஊடுருவல்) மூலம் மூளையில் உள்ள கட்டியை காவேரி மருத்துவமனை அகற்றி உள்ளது. இது தொடர்பாக வடபழநியில் உள்ள காவேரி மருத்துவமனையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், மருத்துவர் ரங்கநாதன் ஜோதி கூறியதாவது: ஆப்பிரிக்க பெண்மணி தொடர் தலைவலி, வலிப்பு நோயுடன் அவதிப்பட்டு வந்துள்ளார். அவர்களுடைய நாட்டில் அவருக்கு சிகிச்சை அளித்தபோதும், சிகிச்சையில் பலன் இல்லாத நிலையில் மேல்சிகிச்சைகாக காவேரி மருத்துவமனைக்கு வந்தார். இதையடுத்து அவருக்கு பல்வேறு வகையான பரிசோதனைகள் செய்யப்பட்டதில் மூளையில் கட்டி உள்ளதை உறுதி செய்தோம்.
தொடர்ந்து அவருக்கு காவேரி இன்ஸ்டிடியூட் ஆப் நியூரோ சயின்சஸில் உள்ள மருத்துவக் குழுவினர், மிக நுணுக்கமான மற்றும் துல்லியமான விழிக்குழிக்கு மேலே சுப்ரா ஆர்பிட்டல் கிரானியோட்டமி (மிகக் குறைவான ஊடுருவல்) செயல்முறையை மேற்கொள்ள திட்டமிட்டு, அவர் புருவத்தையொட்டி ஒரு சிறிய கீறலை செய்து அதன் மூலம் மண்டைக்குள் இருந்த கட்டி அகற்றப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையால் மூளையில் உள்ள திசுக்களுக்கு ஏற்படும் காயத்தையும், சேதத்தையும் குறைக்க முடியும். இந்த அணுகுமுறையில் வடு/தழும்பு ஏற்படுவதும் கணிசமாகக் குறைவாக இருக்கும். சிகிச்சைக்கு பிறகு மீண்டும் வேகமாக இயல்பு நிலைக்கு திரும்ப முடியும். பாரம்பரிய அறுவை சிகிச்சை முறையை விட இது ஒரு பாதுகாப்பான மாற்று வழிமுறையாகவும் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
The post கிரானியோட்டமி செயல்முறை மூலம் ஆப்பிரிக்க பெண்ணின் மூளை கட்டி அகற்றம்: காவேரி மருத்துவமனை சாதனை appeared first on Dinakaran.