×
Saravana Stores

ஆலத்தூர் டாஸ்மாக் கடைக்குள் சென்று கலெக்டர் அதிரடி ஆய்வு

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மாவட்ட கலெக்டர் கற்பகம், இன்று சென்று கொண்டிருந்தார்.

வழியில் இரூர் டாஸ்மாக் கடை எதிரே உள்ள காலி இடங்களில் பிளாஸ்டிக் டம்ளர், பிளாஸ்டிக் கவர்கள் என பிளாஸ்டிக் குப்பைகள் நிறைந்து கிடந்ததை பார்த்த கலெக்டர் தனது வாகனத்தை நிறுத்த சொல்லி திடீரென எதிரில் இருந்த டாஸ்மாக் கடைக்குள் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்று அரசு தடை விதித்துள்ளது உங்களுக்கு தெரியாதா, கண்ணுக்கெதிரே இவ்வளவு பிளாஸ்டிக்குகள் பரவிக்கிடப்பதை நீங்கள் பார்க்கவில்லையா? என சரமாரி கேள்வி கேட்ட கலெக்டர் கற்பகம், சற்றுமுன்தான் சர்வதேச பிளாஸ்டிக் இல்லா தினம் குறித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வை துவக்கி வைத்து விட்டு வருகிறேன்.

ஆனால் இங்கு இவ்வளவு பிளாஸ்டிக் பொருட்கள் கிடப்பது மனதிற்கு வேதனை அளிக்கிறது என தெரிவித்தார். பின்னர் பார் உரிமையாளர் மற்றும் ஊழியர்களை அழைத்து தன் கண்முன்னே பிளாஸ்டிக்குகளை அள்ள உத்தரவிட்டார். இதனையடுத்து ஊழியர்கள் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

“ஆய்வு முடித்து திரும்பும்போது இந்த இடத்தில் பிளாஸ்டிக் பொருட்களே இருக்கக்கூடாது அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு இருக்க வேண்டும். மீண்டும் இதுபோன்று பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த கலெக்டர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

The post ஆலத்தூர் டாஸ்மாக் கடைக்குள் சென்று கலெக்டர் அதிரடி ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Alatur Tasmac ,Perambalur ,District ,Collector ,Karpagam ,Aladhur ,Panchayat ,Union ,Perambalur District ,Tasmac ,Dinakaran ,
× RELATED இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்:...