×

அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டிக்கு விதித்த 3 ஆண்டு சிறை ரத்து: சென்னை ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் விளையாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்தவர் பாலகிருஷ்ணரெட்டி. கடந்த 1998-ஆம் ஆண்டு, ஓசூரை அடுத்த பாகலூரில் நடைபெற்ற போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில், மொத்தம் 108 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், 16 பேரை குற்றவாளிகள் என அறிவித்து சென்னை எம்.பி, – எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதில், பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் 2019-ஆம் ஆண்டு தீர்ப்பளித்ததால், அவர் அமைச்சர் பதவியை இழந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 16 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஜெயச்சந்திரன் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கினார். அதில்; 3 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்த்தார்.

குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் இல்லை; அடையாள அணிவகுப்பு ஏதும் நடத்தப்படவில்லை என கூறிய நீதிபதி, சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சிகள் விசாரணை முறையாக நடைபெறவில்லை எனக் கூறி சிறை தண்டனையை ரத்துசெய்தார்.

The post அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டிக்கு விதித்த 3 ஆண்டு சிறை ரத்து: சென்னை ஐகோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Balakrishna Reddy ,Madras High Court ,CHENNAI ,minister ,Bagalur ,Hosur ,-minister ,Chennai High Court ,Dinakaran ,
× RELATED இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள...