×

செங்கல்பட்டு மாவட்ட சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளிகள் தேர்வு

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நேற்று சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடந்தன. இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பழுதடைந்த ஊரக வீடுகள் சீரமைத்தல், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்த கிராம அளவிலான குழு மூலம் தகுதியான பயனாளிகளை தேர்வு குறித்து விவாதித்து தேர்வு செய்யப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வேடந்தாங்கல் ஊராட்சியில் கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் வேதாச்சலம் தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன், கிராம நிர்வாக அலுவலர்கள் ஜானகிராமன், வினோத்குமார், ஊராட்சி மன்ற துணை தலைவர் கௌதமி அரிகிருஷ்ணன் மற்றும் மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். இந்த ஊராட்சியில் 49 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வீடுகள் கட்டுவதற்கு இக்கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள பெரும்பேர் கண்டிகை ஊராட்சியில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் உதவி செயற்பொறியாளர் நாராயணன், அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானப்பிரகாசம், மேலாளர் ஜார்ஜ், ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி சங்கர், துணை தலைவர் மல்லிகாமணி, ஊராட்சி செயலர் ஏழுமலை உட்பட கிராம பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் வெள்ளபுத்தூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் வரதன் தலைமை தாங்கினார். துணை தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், கலைஞரின் கனவு இல்லம் பயனாளிகளின் தேர்வு மற்றும் புதிய பயனாளிகளின் பெயர்கள் இணைக்கப்பட்டது. இக்கூட்டத்தில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கதிரேசன், ஊராட்சி செயலாளர் ராஜசேகர், ஊராட்சி ஊக்குநர் பாக்கியலட்சுமி, வார்டு உறுப்பினர்கள் ஜான் பாஷா, சரளா, லிங்கநாதன், மாலா, தமிழ்மணி மற்றும் பயனாளிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள தண்டலம், படூர், கேளம்பாக்கம், தாழம்பூர், சிறுசேரி, நாவலூர், புதுப்பாக்கம், மாம்பாக்கம் உள்ளிட்ட 50 ஊராட்சிகளிலும், அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் முன்னிலையில் சிறப்பு கிராமசபை கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டங்களில் அனைத்து ஊராட்சிகளிலும் பல்வேறு கணக்கெடுப்புகளின் மூலம் சேகரிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்ட கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு பயனாளிகள் தேர்வு செய்து ஒப்புதல் பெறுதல், 2001ம் ஆண்டிற்கு முன்பு தமிழ்நாடு அரசின் மூலமாக கட்டப்பட்ட ஓட்டு வீடு மற்றும் கான்கிரீட் வீடு ஆகியவற்றில் பழுது பார்க்க வேண்டிய அளவிற்கு சேதமடைந்த வீடுகளை கணக்கெடுத்து அவற்றை பழுது நீக்கம் செய்ய ஒப்புதல் பெறுதல் ஆகிய இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் உள்ளன. இதில் மண்ணிவாக்கம், வண்டலூர், ஊரப்பாக்கம், காரணைப்புதுச்சேரி, நெடுங்குன்றம், வேங்கடமங்கலம், நல்லம்பாக்கம், கீரப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகள் உள்ளது. இங்குள்ள, பழுதடைந்த ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டம் மற்றும் கலைஞரின் நினைவு இல்ல திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த பயனாளிகளை தேர்ந்து எடுப்பதற்காக சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் தகுதி வாய்ந்த பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தினை வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வன் ஆய்வு செய்தார். இதில் பெரும்பாலான ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த 100 நாள் வேலை கேட்டு ஏராளமான பெண்கள் கிராம சபை கூட்டத்தில் முறையிட்டனர். பல ஊராட்சிகளில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் மின் இணைப்பு கேட்டு முற்றுகையிட்டனர். அப்போது ஏராளமான பயனாளிகளுக்கு பட்டியலில் பெயர் வந்துள்ளது. ஆனால் இலவச வீட்டுமனை பட்டா இல்லாததால் பயனாளிகளுக்கு எப்படி வீடு வழங்குவீர்கள் என்று கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனவே ஆட்சேபனை அற்ற புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து வரும் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றும்படி வலியுறுத்தினர். இதனை அடுத்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. இதனால் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post செங்கல்பட்டு மாவட்ட சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளிகள் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu District ,Madhurandagam ,
× RELATED அத்தியாவசிய பொருட்கள் கூடுதல்...