×
Saravana Stores

அடையாறில் திடீரென பஸ் தீப்பிடித்து எரிந்தது: பயணிகள் உயிர் தப்பினர்

சென்னை: அடையாறில் சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் திடீரென்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை மாநகர போக்குவரத்து கழக சி.என்.ஜி காஸ் பொருத்திய பேருந்து தடம் எண்: 102, பிராட்வேயில் இருந்து சிறுசேரி நோக்கி நேற்று சென்று கொண்டிருந்தது. பேருந்தை சஞ்ஜெய்குமார் ஓட்டிச் சென்றார். கண்டக்டராக குட்டியப்பன் இருந்தார்.

பேருந்தில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அடையாறு எல்.பி சாலையில் மாலை 3.30 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது பேருந்தின் முன்பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதனைக் கண்ட ஓட்டுநர் உடனடியாக பேருந்தை சாலையோரம் நிறுத்தினார். பயணிகள் பீதியில் அலறியடித்துக் கொண்டு பேருந்தில் இருந்து இறங்கி ஓடினர்.

அடுத்த சில நிமிடங்களுக்குள் பேருந்து முழுவதும் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. திருவான்மியூர் மற்றும் மயிலாப்பூரில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரைமணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பேருந்து முழுவதுமாக எரிந்து நாசமானது. இதுதொடர்பாக சாஸ்திரிநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post அடையாறில் திடீரென பஸ் தீப்பிடித்து எரிந்தது: பயணிகள் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.

Tags : Adyar ,CHENNAI ,Chennai Municipal Transport Corporation ,Broadway ,Siruseri ,Dinakaran ,
× RELATED மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக அடையாறு...