×
Saravana Stores

ஆடி மாதத்தில் புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா ஆன்மிக பயணம்: 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும், அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: ஆடி மாத அம்மன் கோயில் ஆன்மிக பயணத்தில் பங்கேற்க விரும்பும் மூத்த குடிமக்கள் வரும் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை மண்டலத்தில் மயிலாப்பூர் கற்பகாம்பாள், பாரிமுனை காளிகாம்பாள், திருவொற்றியூர் வடிவுடையம்மன், மாங்காடு காமாட்சியம்மன், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் ஆகியகோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும், தஞ்சாவூர் மண்டலத்தில் தஞ்சாவூர் பெரிய கோயில், வராகியம்மன், பங்காரு காமாட்சியம்மன், புன்னைநல்லூர் மகா மாரியம்மன், திருக்கருகாவூர் கர்ப்பக ரட்சாம்பிகை, பட்டீஸ்வரம் துர்கையம்மன் ஆகியகோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும்,

கோயம்புத்தூர் மண்டலத்தில் கோயமுத்தூர் கோனியம்மன், தண்டுமாரியம்மன் கோயில், பொள்ளாச்சி மாரியம்மன், அங்காளம்மன் கோயில், ஆனைமலை மாசாணியம்மன் கோயில், சூலக்கல் மாரியம்மன் கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும், திருச்சி மண்டலத்தில் உறையூர் வெக்காளியம்மன் கோயில், கமலவள்ளி நாச்சியார் கோயில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், உஜ்ஜையினி மாகாளியம்மன் கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும்,

மதுரை மண்டலத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோயில், வண்டியூர் மாரியம்மன் கோயில், மடப்புரம் காளியம்மன் கோயில், அழகர்கோவில் ராக்காயியம்மன் கோயில், சோழவந்தான் ஜனகை மாரியம்மன் கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும், திருநெல்வேலி மண்டலத்தில் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், முப்பந்தல் இசக்கியம்மன் கோயில், சுசீந்திரம் ஒன்னுவிட்ட நங்கையம்மன் கோயில், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், குழித்துறை சாமுண்டியம்மன் கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.

ஆடி மாத அம்மன் திருக்கோயில்களுக்கான ஆன்மிகப் பயணம் நான்கு கட்டங்களாக, அதாவது ஜூலை 19, 26, ஆகஸ்ட் 2, 9 ஆகிய நாட்களில் அந்தந்த மண்டலங்களில் தொடங்கப்பட உள்ளன. இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் மூத்த குடிமக்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்டவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

இதற்கான விண்ணப்பங்களை இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளமான www.hrce.tn.gov.inலிருந்து பதிவிறக்கம் செய்தோ அல்லது சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் நேரில் பெற்றோ விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் இணைத்து வரும் ஜூலை 17ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைத்திட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

* கட்டணமில்லா தொலைபேசி
ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் மூத்த குடிமக்கள் இதுதொடர்பான மேலதிக விவரங்களை, இந்து சமய அறநிலையத் துறையின் கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 4253 1111, சென்னை மண்டலத்திற்கு 99417020754, 044-29520937, தஞ்சாவூர் மண்டலத்திற்கு 0436-2238114, கோயம்புத்தூர் மண்டலத்திற்கு 0422-2244335, திருச்சி மண்டலத்திற்கு 0431-2232334, மதுரை மண்டலத்திற்கு 0452-2346445, திருநெல்வேலி மண்டலத்திற்கு 0462-2572783 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு அறியலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை ெதரிவித்துள்ளது.

 

The post ஆடி மாதத்தில் புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா ஆன்மிக பயணம்: 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும், அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : Amman ,Adi ,Minister ,Shekharbabu ,Chennai ,Aadi ,Mata ,Amman Temple ,Mylapur Karpakampal ,Parimuna Kalikampal ,Tiruvottiyur ,
× RELATED தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும்...