×
Saravana Stores

தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் கச்சத்தீவை மீட்க அர்த்தமுள்ள எந்த முயற்சியையும் பாஜ அரசு எடுக்கவில்லை: உள்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று எழுதியுள்ள கடிதம்: சமீப வாரங்களில் இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது கவலைபட வைத்துள்ளது. IND-TN-10-MO-1379 மற்றும் IND-TN-09-MO-2327 என்ற பதிவெண்களை கொண்ட இரண்டு மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டு படகுகளிலும், இரண்டு பதிவு செய்யப்படாத மீன்பிடி படகுகளிலும் சென்ற தமிழ்நாட்டை சேர்ந்த 25 மீனவர்கள் நேற்று முன்தினம் (1ம் தேதி) இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

1974ம் ஆண்டிலிருந்தே, அப்போதைய ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வை தொடர்ந்து இந்த பிரச்னை நிலவுவதாக ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சருக்கு நான் கடந்த 27-6-2024 நாளிட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன். திமுக தலைமையிலான மாநில அரசு கச்சத்தீவு ஒப்பந்தத்தை அப்போது முழுவீச்சில் எதிர்த்தது என்பதையும், தனது எதிர்ப்பை தமிழ்நாடு சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு, இது சம்பந்தமாக மாநில அரசுடன் முறையாக கலந்தாலோசிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்திய மீனவர்களின் உரிமைகளுக்கும், நலன்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையிலும், அவற்றை பறிக்கும் வகையிலும் கச்சத்தீவை முழுமையாக இலங்கைக்கு விட்டுக் கொடுத்தது அப்போதைய ஒன்றிய அரசுதான். எனது தலைவரும், அப்போதைய திமுக தலைவருமான கலைஞர் உச்சநீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்து, அதில், ‘‘ஒன்றிய அரசு மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் அரசியலமைப்பிற்கு முரணானதாக இருக்கும்போது, கச்சத்தீவின் இறையாண்மை ஒரு தீர்க்கப்பட்ட விஷயம் என்று கூற முடியாது’’ என்று திட்டவட்டமாக கூறியிருந்தார்.

பாஜ தலைமையிலான அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியில் இருந்தாலும், இந்த பிரச்னையை தேர்தல் நேர முழக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தி வருகிறது, கச்சத்தீவை மீட்க குறிப்பிடத்தக்க அர்த்தமுள்ள எந்த முயற்சியையும் அது எடுக்கவில்லை. தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் எதிர்நோக்கும் இன்னல்களுக்கு நிரந்தர தீர்வு காண்பது காலத்தின் கட்டாயமாகும். எனவே, தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்டும் வகையில், மீனவர்களுக்கு தொடர்ந்து இடையூறு விளைவித்து வரும் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண தேவையான, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

* இந்திய மீனவர்களின் உரிமைகளுக்கும், நலன்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையிலும், அவற்றை பறிக்கும் வகையிலும் கச்சத்தீவை முழுமையாக இலங்கைக்கு விட்டுக் கொடுத்தது அப்போதைய ஒன்றிய அரசுதான்.

The post தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் கச்சத்தீவை மீட்க அர்த்தமுள்ள எந்த முயற்சியையும் பாஜ அரசு எடுக்கவில்லை: உள்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,government ,Kachchathivi ,CM ,M.K.Stal ,Home Minister ,Chennai ,Chief Minister ,M.K.Stalin ,Union External Affairs Minister ,Jaishankar ,Sri Lankan Navy ,BJP government ,
× RELATED பாம்பு கடியை அறிவிக்கக்கூடிய (Notifiable Disease) நோயாக அறிவித்தது தமிழ்நாடு அரசு!