×
Saravana Stores

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் ‘போதையே ஏறலன்னு சொன்னாங்க… அதனாலதான் மெத்தனால் கலந்தோம்…’: சிபிசிஐடி போலீசாரிடம் சாராய வியாபாரி பரபரப்பு வாக்குமூலம்

கள்ளகுறிச்சி: ‘போதையே ஏறலன்னு சொன்னாங்க… அதான் மெத்தனால் கலந்து விற்றோம்…’என்று சிபிசிஐடி போலீஸ் காவல் விசாரணையில் சாராய வியாபாரி பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்த விவகாரத்தில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். முக்கிய குற்றவாளிகளான புதுச்சேரி மடுகரை மாதேஷ், கள்ளக்குறிச்சி பிரபல சாராய வியாபாரி கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா உள்பட 21 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் மாதேஷ், கோவிந்தராஜ், விஜயா உள்பட 11 பேரை சிபிசிஐடி போலீசார் நேற்று முன்தினம் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் பகல் மற்றும் இரவு நேரங்களில் சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான போலீசார் சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்த கெமிக்கல் கம்பெனி உரிமையாளர்கள் பன்சிலால், கவுதம் சந்த் ஆகியோரிடம் முதல் கட்ட விசாரணையை தொடங்கினர்.

அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில், ‘நாங்கள் மாதவரம் பகுதியில் கெமிக்கல் கம்பெனி நடத்தி வருகிறோம். புதுவை மடுகரையை சேர்ந்த மாதேஷ், தின்னர் பயன்பாட்டுக்காக மெத்தனால் தேவை என கேட்டதால் 190 கிலோ எடை கொண்ட 19 பேரல்கள் மெத்தனாலை சப்ளை செய்தோம். இந்த மெத்தனாலை கள்ளச்சாராய பயன்பாட்டிற்கு பயன்படுத்துவார்கள் என தெரிந்திருந்தால் கொடுத்திருக்கவே மாட்டோம்’ என கூறினர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் மெத்தனால் விற்பனை செய்ததற்கான ஆவணங்கள் ஏதாவது உள்ளதா என கேட்டதற்கு, ‘விற்பனை செய்ததற்கான எவ்வித ஆவணங்களையும் நாங்கள் பதிவு செய்யவில்லை’ என கூறினர்.

இதிலிருந்து பதிவு செய்யாமல் கள்ளத்தனமாக விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கள்ளக்குறிச்சி பிரபல சாராய வியாபாரி கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ் மற்றும் இவரது மனைவி விஜயா ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோது அவர்கள் சாராயத்தில் மெத்தனால் கலந்ததை ஒப்புக்கொண்டனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், ‘கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் நீண்ட நாட்களாக கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்தோம்.

இதில் கல்வராயன்மலை பகுதிக்கு உட்பட்ட மல்லிகைபாடி ஏழுமலை, சேஷசமுத்திரம் பிரபல சாராய வியாபாரி சின்னதுரை மற்றும் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த ஜோசப்ராஜா உள்ளிட்ட பலரிடமும் சாராயம் வாங்கி கள்ளக்குறிச்சி பகுதியில் விற்பனை செய்தோம். மேலும் சம்பவத்திற்கு முன்னதாக சாராயம் வாங்கி குடித்தவர்கள் சரியாக போதை ஏறவில்லை, சரக்கு சரியில்லை என எங்களிடம் புகார் கூறினர்.  இதையடுத்து விற்பனையை அதிகரிக்கவும், போதையை அதிகரிக்கவும் சாராயத்துடன் மெத்தனாலை கலந்தால் போதை அதிகரிக்கும் என ஒரு சிலர் சொன்னதால் நாங்கள் மெத்தனால் கலக்க முடிவு செய்தோம்.

மல்லிகைபாடி சாராய வியாபாரி ஏழுமலையிடம் சாராயம் வாங்கி, சின்னதுரையிடம் ஏற்கனவே கேட்டிருந்த மெத்தனாலை கலந்து பாக்கெட் சாராயமாக தயார் செய்து விற்றோம். அன்று விற்பனை செய்த சாராயத்தை குடித்தவர்களுக்கு வயிற்றுவலி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டு கண்பார்வையும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொருவராக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவகாரத்திற்கு பின்புதான், சாராயத்தில் மெத்தனால் கலந்ததால் விஷ சாராயமாக மாறியது தெரியவந்தது’ என சிபிசிஐடி போலீசாரிடம் தெரிவித்தனர்.

இரண்டாவது நாளான நேற்று சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த பிரபல சாராய வியாபாரி சின்னதுரை, மெத்தனால் கடத்துவதற்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியான புதுவை மடுகரையை சேர்ந்த மாதேஷ் உள்ளிட்டோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். இன்று (3ம் தேதி) 11 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.

The post கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் ‘போதையே ஏறலன்னு சொன்னாங்க… அதனாலதான் மெத்தனால் கலந்தோம்…’: சிபிசிஐடி போலீசாரிடம் சாராய வியாபாரி பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,CBCID police ,CBCID ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம்...