×

மஞ்சுவிரட்டு முன்விரோதத்தில் அண்ணன், தம்பி படுகொலை: 8 பேர் கும்பல் வெறிச்செயல்

காளையார்கோவில்: காளையார்கோவில் அருகே மஞ்சுவிரட்டு முன்விரோதத்தில் அண்ணன், தம்பியை 8 பேர் கும்பல் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே நாச்சிக்குளத்தை சேர்ந்தவர் ஆண்டிச்சாமி. இவரது மகன்கள் ஜெயசூர்யா(25), சுபாஷ்(23). இருவரும் சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே, கொல்லங்குடி பகுதியில் உள்ள தோட்டத்தில் தங்கி ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து போட்டிகளில் பங்கேற்று வந்தனர். காளையார்கோவில் அடுத்த கல்லல் அருகே பனங்குடியில் கடந்த ஜூன் 22ம் தேதி மஞ்சுவிரட்டு நடந்தது.

இதில், சுபாஷ், ஜெயசூர்யா வளர்த்த காளையும் கலந்து கொண்டது. அங்கு மாடு பிடிப்பதில் சகோதரர்களுக்கும், சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதனால் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. சகோதரர்கள் இருவரையும் கொலை செய்ய திட்டமிட்டு, நேற்று முன்தினம் நள்ளிரவு எதிர்தரப்பை சேர்ந்த 8 பேர் கும்பல் 3 டூவீலர்களில் பயங்கர ஆயுதங்களுடன் தோட்டத்திற்கு வந்தனர். அங்கு சுபாஷ், ஜெயசூர்யாவை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். அப்போது, சகோதர்களுடன் இருந்த நண்பர்கள் ராஜேஷ், நவீன் உட்பட 3 பேர் தப்பியோடி விட்டனர். ரத்த வெள்ளத்தில் சகோதரர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இதுகுறித்து ராஜேஷ், நவீன் ஆகியோர் காளையார்கோவில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சுபாஷ், ஜெயசூர்யாவின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு நேற்று திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மஞ்சுவிரட்டு முன்விரோதத்தில் 8 பேர் கும்பல் அண்ணன், தம்பியை வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* மனைவியுடன் தகாத உறவால் தலையில் குழவியை போட்டு வாலிபர் கொலை
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே நம்புதாளையை சேர்ந்தவர் அபுபக்கர்(27). ஓட்டல் ஊழியரான இவர், நேற்று முன்தினம் இரவு ஒரு வீட்டின் பின்புறம் ஆட்டுக்கல் குழவியை தலையில் போட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தொண்டி போலீசார் நடத்திய விசாரணை நடத்தி அந்த வீட்டின் உரிமையாளரா மீசான் அலியை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், மீசான் அலி மனைவியுடன், அபுபக்கர் தகாத உறவு வைத்திருந்தார். இதுபற்றி தெரிந்து அவர் மனைவியை கண்டித்துள்ளார். இது தொடர்பாக நேற்று முன்தினம் தம்பதியிடையே தகராறு ஏற்பட்டு மனைவி கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து மீசான் அலி, தனது வீட்டிற்கு அபுபக்கரை அழைத்து வந்து மதுபானம் அருந்த செய்துள்ளார். போதை அதிகமான நிலையில் அபுபக்கர் தலையில் ஆட்டுக்கல் குழவியை போட்டு கொலை செய்துள்ளதாக தெரிவித்தனர்.

The post மஞ்சுவிரட்டு முன்விரோதத்தில் அண்ணன், தம்பி படுகொலை: 8 பேர் கும்பல் வெறிச்செயல் appeared first on Dinakaran.

Tags : Manchuvirattu ,Bulaiargo ,Manchuvirattu Protest ,Andichami ,Nachikulam ,Wadipatti, Madurai district ,Jayasuriya ,Subash ,Sivaganga District ,Anvirutham Annan ,8 People Gang Frenzy ,
× RELATED சிவகங்கை அருகே காவல் நிலைய சார்பு...