×
Saravana Stores

குமரியில் நீர்நிலை கரையோரம் கொட்டப்படும் குப்பைகள்; சுகாதார சீர்கேட்டால் மக்கள் பாதிப்பு

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் குப்பையால் பெரிய அச்சுருத்தல் இருந்து வருகிறது. குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரித்து வழங்க உள்ளாட்சி நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது. மக்கும் குப்பைகளை கொண்டு பல்வேறு நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உரமாக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து இறச்சி கழிவுகள், ஒட்டல் கழிவுகள் வாகனங்கள் மூலம் எடுத்துவரப்பட்டு, ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் கொட்டி செல்லப்படுகிறது. குப்பைகள் கொட்டப்படும் இடங்களில் சுகாதாரசீர் கேடு ஏற்பட்டு வருகிறது. சில நேரங்களில் கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகள் கொண்டு வரும் வாகனங்களை பொதுமக்கள் சிறைப்பிடித்து, மீண்டும் கேரளாவிற்குள் அனுப்பும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இருப்பினும், அங்கிருந்து வரும் குப்பைகள் குறைந்தபாடியில்லை. இதனை தவிர சில ஊராட்சி, பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை நீர்நிலையோரம் கொட்டப்படும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் கெடுவதோடு, பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் பயோமைனிங் முறையில் உரமாக்கப்பட்டு வருகிறது. மாநகர பகுதியில் கிடைக்கும் குப்பைகளை தனியார் மூலம் அகற்றப்பட்டு, குப்பைகள் எடைக்கு ஏற்ப அவர்களுக்கு பணம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் குப்பைகள் எடுக்கும் நபர்கள், எடைகுறைந்த குப்பைகளை நீர்நிலைகள் மற்றும் சாலையோரம் கொட்டி செல்லும் சம்பவங்கள் நடந்து வருகிறது. சாலையோரம், நீர்நிலைகளில் குப்பைகளை ெகாட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி மேயர் மகேஷ் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

நாகர்கோவில் மாநகராட்சி அருகே பறக்கை பகுதி உள்ளது. பறக்கையில் வயல்வெளிகள் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த வயல்கள் சுசீந்திரம், பறக்கை 1, 2, 3 ஆகிய குளங்களில் இருந்து பாசன வசதி பெற்று வருகிறது. இந்த குளத்தையும், வயலையும் பிரிக்கும் வகையில் தார்சாலை உள்ளது. இந்த சாலையை விவசாயிகள், அந்த பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இரவு நேரத்தில் இந்த சாலையில் எந்த வாகனங்களும் செல்வது இல்லை. இதனை பயன்படுத்தி, சிலர் குப்பைகளை வாகனங்களில் எடுத்து வந்து சாலையோரம் கொட்டி செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. சாலையோரம் 3 இடங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு மலைபோல் தேங்கி கிடக்கிறது. குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இந்த குப்பையில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள குளங்களிலும், வயல்களிலும் விழுந்து நிலம் மற்றும் தண்ணீர் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பறக்கின்கால் பாசன சபை தலைவர் ரவீந்திரன் கூறியதாவது: பறக்கை குளத்திற்கும், வயல்வெளிக்கும் இடையே தெங்கம்புதூரில் இருந்து காக்குமூர், வடக்கு தாமரைகுளம் செல்லும் சாலை உள்ளது.

இந்த சாலையில் பல வாகனங்கள் சென்று வருகிறது. அதுபோல் வயல்களுக்கு உரம் கொண்டு செல்வதற்கும் விவசாயிகள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில மாதத்திற்கு முன்பு இந்த சாலையோரம் யாரோ மர்ம நபர்கள் குப்பைகளை கொட்டி வந்தனர். மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்ததின் பேரில் குப்பை கொட்டுவது குறைந்து இருந்தது. இந்த நிலையில் கேரளாவில் இருந்து ஓட்டல் கழிவுகளை கொண்டு கொட்டிச்சென்றுள்ளனர். இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் விவசாயிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் குப்பையில் உள்ள பிளாஸ்டிக் கவர்கள், பாட்டில்கள் தண்ணீரிலும், விவசாய நிலத்திலும் விழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்தில் இங்கு குப்பைகொட்டி செல்பவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.

 

The post குமரியில் நீர்நிலை கரையோரம் கொட்டப்படும் குப்பைகள்; சுகாதார சீர்கேட்டால் மக்கள் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Kumari ,Nagarko ,Kumari district ,Dinakaran ,
× RELATED சுசீந்திரம் அருகே பழையாற்றில் ஆகாய...