×
Saravana Stores

எரிபொருள் செலவை குறைக்க நடவடிக்கை; காஸ், பேட்டரியில் இயங்கும் அரசு பஸ்கள் விரைவில் சோதனை ஓட்டம்

நெல்லை: எரிபொருள் செலவை குறைக்கும் வகையில் காஸ், பேட்டரியில் இயங்கும் அரசு பஸ்கள் சோதனை ஓட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழகத்தினர் தெரிவித்து உள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சென்னை, விழுப்புரம், சேலம், மதுரை, நெல்லை உள்பட 8 கோட்டங்களில் 20 ஆயிரத்து 260 பஸ்கள் உள்ளன. இவை 317 பணிமனைகள் மூலம் தினமும் 10 ஆயிரத்து 132 வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. தினமும் 1.76 கோடி பயணிகள் 79 லட்சம் கிமீ தூரம் பயணிக்கின்றனர். டிரைவர்கள், கண்டக்டர்கள், தொழில் நுட்ப பணியாளர்கள், அலுவலர்கள் உள்பட ஒரு லட்சத்து 11 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள 17 ஆயிரத்து 662 கிராமங்களில் 17 ஆயிரத்து 322 கிராமங்களுக்கு அரசு பஸ் வசதி உள்ளது. கிராமப்புற சேவையில் 98.07 சதவீதம் பஸ்களை சேவை மனப்பான்மையுடன் அரசு போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது. அரசு போக்குவரத்து கழகங்களின் நிதி நெருக்கடியை சமாளிக்க பஸ்களில் விளம்பரம் செய்தல், பஸ் பாடி முழுவதும் மாத வாடகையில் விளம்பரம் செய்தல் உள்ளிட்டவை மூலம் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலவச பஸ் பாஸ், மகளிர் இலவச பயணம் உள்ளிட்ட திட்டங்களால் போக்குவரத்து கழகங்களுக்கு அரசு நிதி ஒதுக்கினாலும் அடிக்கடி விலை ஏறும் உதிரிபாகங்கள், டீசல் விலை, வருவாய் இன்றி இயக்கப்படும் பல வழித்தடங்கள், அதிகாலை நேர வழித்தடங்கள் உள்ளிட்டவைகளால் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. வரவுக்கும், செலவுக்கும் நிலவும் பற்றாக்குறையை பட்ஜெட்டில் ஏற்க வேண்டுமென தொழிற்சங்கங்கள் குரல் எழுப்பி வருகின்றன.

இந்நிலையில் அரசு போக்குவரத்து கழக பஸ்களின் டீசல் செலவை 25 சதவீதம் குறைக்கும் வகையில், அரசு பஸ்களை சிஎன்ஜி காஸ் மூலம் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக 10க்கும் மேற்பட்ட பஸ்கள், காஸ் மூலம் இயக்க சோதனை ஆய்வுகள் நடந்து வருகிறது. சென்னை, விழுப்புரம், கும்பகோணம், மதுரை ஆகிய போக்குவரத்து கழகங்களில் இருந்து தலா 2 பஸ்களை தேர்வு செய்து சிஎன்ஜி காஸ் மூலம் இயக்க பணிகள் நடந்து வருகிறது. மேலும் சென்னை உள்பட அனைத்து போக்குவரத்து கழகங்களில் பேட்டரி பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து முதற்கட்டமாக சிஎன்ஜி காஸ் மூலம் பஸ்கள் இயக்குவதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் அரசு போக்குவரத்து கழக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், டீசல் விலை, உதிரி பாகங்கள் விலை ஏற்றம் போன்றவற்றால் போக்குவரத்து கழகம் நிதி நெருக்கடியில் தள்ளாடி வருகிறது. எரிபொருள் செலவை குறைக்க காஸ் மூலம் பஸ்களை இயக்குவதும், பேட்டரி வாகனங்களை மாநகர பகுதிகளில் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சென்னை விழுப்புரம், கும்பகோணம், மதுரை உள்ளிட்ட நகரங்களில் முதற்கட்டமாக காஸ் மற்றும் பேட்டரி மூலம் இயங்கும் பஸ்கள் விரைவில் இயக்கப்படும். இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுவது தடுக்கப்படும் என்றனர்.

 

The post எரிபொருள் செலவை குறைக்க நடவடிக்கை; காஸ், பேட்டரியில் இயங்கும் அரசு பஸ்கள் விரைவில் சோதனை ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Nellai ,Tamil Nadu Government Transport Corporation ,Chennai ,Villupuram ,Salem ,Madurai ,Nella ,Dinakaran ,
× RELATED போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்