×
Saravana Stores

ஆனி மாதத்திலேயே புதுகையில் களைகட்ட துவங்கிய மொய்விருந்து

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் மொய் விருந்து ஆனி மாதத்திலே களை கட்ட துவங்கியது. நேற்று கீரமங்கலத்தில் 3 இடங்களில் மொய்விருந்து நடந்தது. தஞ்சை மாவட்டம் பேராவூரணி மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் சமூகத்தில் பின் தங்கியுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக முதன் முதலில் தொடங்கப்பட்டது தான் மொய்விருந்து விழாக்கள். அது வளர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சுற்றி உள்ள பகுதிகளான கொத்தமங்கலம், கீரமங்கலம், வடகாடு, மாங்காடு, அணவயல், சேந்தன்குடி, குளமங்கலம் மற்றும் அதனை சுற்றிய கிராமங்களிலும் பரவி தற்போது மேற்கண்ட மொய் விருந்து விழாக்கள் இந்த பகுதி மக்களுக்கு வர்த்தகம் சார்ந்த வாழ்வாதாரமாக மாறியும் கலாச்சாரம் சார்ந்த விழாவாகவும் உள்ளது.

இந்நிலையில் ஆடி, ஆவணி மாதங்களில் நடைபெறும் மொய் விருந்தில் கோடிகள் புரண்டு வந்த நிலையில் கடந்த 2018ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் வீசிய கஜா புயல் மொய் விருந்து நடத்தக்கூடிய பகுதியில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஒட்டுமொத்தமாக அழித்துச் சென்றது. இதனால் மொய் விருந்து நடத்துபவர்கள் போதிய அளவு மொய் வராததால் பாதிக்கப்பட்ட நிலையில் பிறகு வந்த கொரோனா பாதிப்பால் இரண்டு ஆண்டு காலம் சரியான நேரத்திற்கு மொய் விருந்து நடத்த முடியாமல் கிராம மக்கள் தவித்தனர்.கொரோனாவுக்கு பிறகு நடைபெற்ற மொய் விருந்துகளில் மொய் அளிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து மொய் பணத்தின் விகிதாச்சாரமும் சரிவை சந்தித்துள்ளது.

இது ஒரு புறம் இருந்தாலும் வழக்கமாக ஆடி, ஆவணி மாதங்களில் நடைபெறக்கூடிய மொய் விருந்து விழாக்கள் ஆனி மாதம் முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்தாண்டும் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஆனி மாதமே மொய் விருந்து விழா தொடங்கி உள்ளது. புதுக்கோட்டையில் இந்தாண்டு முதல் மொய் விருந்து ஆலங்குடி அருகே கீரமங்கலத்தில் 3 இடங்களில் நேற்று நடைபெற்றது. அனைத்து இடங்களிலும் ஏராளமானோர் நேரில் சென்று ஆர்வத்துடன் மொய் அளித்தனர். விழா நடத்திய ஒவ்வொருவருக்கும் எதிர்பார்த்த மொய் கிடைத்ததாகவும், சிலருக்கு அதை விட கூடுதலாக கிடைத்ததாகவும் கூறினர். ஆரம்பமே அமர்க்களமாக இருந்ததால் மொய் விருந்தாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

 

The post ஆனி மாதத்திலேயே புதுகையில் களைகட்ட துவங்கிய மொய்விருந்து appeared first on Dinakaran.

Tags : Moivudhu ,Pudugai ,Ani ,Pudukottai ,Moi festival ,Keeramangalam ,Tanjore ,Peravoorani ,
× RELATED அன்னம்பாலிக்கும் சிவாலயங்களில் அன்னாபிஷேகம்