உதகை: கோடை சீசன் நிறைவடைந்ததை அடுத்து சினிமா படப்பிடிப்புக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறும். இந்த சீசனில் வெளி மாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கானோா் வருகை தருவா். அவா்களை மகிழ்விக்கும் வகையில் உதகை தாவரவியல் பூங்காவில் மலா்க் கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி, சிம்ஸ் பூங்காவில் பழக் கண்காட்சி உள்ளிட்ட கோடை விழாக் கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
சுற்றுலாப் பயணிகள் அதிகம் போ் வருவதால், கோடை சீசனில் தாவரவியல் பூங்கா உள்ளிட்ட 7 பூங்காக்களில் சினிமா படப்பிடிப்புக்கு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை 3 மாதங்களுக்கு சினிமா படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. பூங்காவில் உள்ள நடைபாதையோரம், மலா் பாத்திகளில் மலா் செடிகள் சேதம் ஏற்படுவதை தவிா்க்கவும், சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் இருக்கவும் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்கள் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தாவரவியல் பூங்கா உள்பட 7 முக்கிய சுற்றுலா தலங்களில் படப்பிடிப்பு நடத்த தற்போது அனுமதி அளிக்கப்படுவதாக தோட்டக்கலைத் துறையினா் தெரிவித்துள்ளனா். தோட்டகலை துறைக்கு சொந்தமான பூங்காக்களில் படப்பிடிப்பு நடத்த அனுமதி தேவைப்படுவோர் அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சினிமா படப்பிடிப்பு நடத்த அனுமதி தேவைப்படுவோர் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post உதகையில் கோடை சீசன் நிறைவடைந்ததை அடுத்து சினிமா படப்பிடிப்புக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.!! appeared first on Dinakaran.