×

10.5% இடஒதுக்கீடு வழக்கு விரைவில் விசாரணை: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்ற பதிவாளர் பதில்

புதுடெல்லி: வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள், விரைவில் பட்டியலிட்டு விசாரிக்கப்படும் என தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று உச்ச நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார். கல்வி, வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி கடந்த பிப்ரவரி 26ம் தேதி தமிழக அரசால் சட்டம் இயற்றப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, இந்த சட்டத்தை ரத்து செய்தது.இதனை எதிர்த்து தமிழக அரசு உட்பட 13க்கும் மேற்பட்டோர் சார்பில் மேல்முறையீட்டு மனுக்களும், பல்வேறு கேவியட் மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் அனைத்தும் கடந்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், வழக்கறிஞர் குமணன் ஆகியோர் உச்ச நீதிமன்ற பதிவாளர் சிராக் பானுசிங் முன்னிலையில் ஒரு கோரிக்கை வைத்தனர். அதில், ‘வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுக்களை அவசர வாழக்காக பட்டியலிட்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும். இதனால் மாநிலத்தில் மருத்துவம், பொறியியல் ஆகிய கலந்தாய்வு, அதேப்போன்று அரசு பணி நியமனம் ஆகியவை கிடப்பில் உள்ளன,’என தெரிவித்தனர். இந்த கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த பதிவாளர், இந்த விவகாரம் தொடர்பாக தலைமை நீதிபதி என்.வி.ரமணாவின் அறிவுறுத்தலை பெற்று, வழக்கை விரைந்து பட்டியலிடுவதாக தெரிவித்தார். இதனால், இந்த வழக்கு ஓரிரு நாளில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது….

The post 10.5% இடஒதுக்கீடு வழக்கு விரைவில் விசாரணை: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்ற பதிவாளர் பதில் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Tamil Nadu Government ,New Delhi ,Varians ,Supreme Court of Tamil Nadu Government ,Dinakaran ,
× RELATED நீட் வினாத்தாள் கசிவு: தேர்வை மீண்டும் நடத்தக்கோரி மனு