×

லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை: திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்

* உபி நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு பரபரப்பு மனு* ஒன்றிய அமைச்சர் மகன், 12 பேர் மீது கொலை வழக்கு?லக்னோ: உத்தர பிரதேசத்தில் காரை மோதி விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு, இந்த படுகொலை சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக நீதிமன்றத்தில் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தியபோது, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பாஜ தலைவர்கள், அமைச்சர்களை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த அக்டோபர் 3ம் தேதி, உத்தர பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கேரியில் நடந்த நிகழ்ச்சியில் பாஜ.வை சேர்ந்த  ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா கலந்து கொண்டார். அவரை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது, விவசாயிகள் மீது அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா வந்த  கார் மோதி 4 பேர் பலியாகினர். இதைத் தொடர்ந்து,  விவசாயிகள் நடத்திய தாக்குதலில்  பாஜ.வினர், பத்திரிகையாளர் உட்பட 4 பேர்  கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, ஆசிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இச்சம்பவம் பற்றி உத்தர பிரதேச அரசு அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்த முதல் கட்ட குற்றப்பத்திரிகையில், அதி வேகமாக வாகனத்தை ஓட்டி மரணத்தை ஏற்படுத்துதல், அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட சாதாரண குற்றப் பிரிவுகளில் மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவரான வித்யாராம் திவாகர் தாக்கல் செய்துள்ள புதிய மனுவில், ‘லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என விசாரணையில் உறுதியாகி இருக்கிறது. எனவே, இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட குற்றப் பிரிவுகளை நீக்கி விட்டு, கொலை முயற்சி, பயங்கர ஆயுதங்கள் போன்றவற்றால் கொடூர காயங்களை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும்,’ என கோரப்பட்டுள்ளது. உத்தர பிரதேச அரசு குற்றவாளிகளை காப்பாற்றும் வகையில் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்ததால் உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. மேலும்,  விசாரணையை விரைவாக முடிக்கும்படி சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உத்தரவிட்டது.  மேலும், இந்த குழுவில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளையும் சேர்க்கும்படி உத்தரவிட்டது. இது போன்ற நிலையில், வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஒன்றிய அமைச்சரின் மகன் உட்பட 13 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய அனுமதிக்கும்படி சிறப்பு  புலனாய்வு குழு  திடீரென கோரியிருப்பது, பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது. ஏன் இந்த திடீர் மாற்றம்உத்தர பிரதேசம் உட்பட 5 மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இதை முன்னிட்டே, சமீபத்தில் சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களையும் ஒன்றிய அரசு ரத்து செய்தது. விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்யவும்  முன்வந்துள்ளது. இந்நிலையில், விவசாயிகள் மீதான இந்த தாக்குதல் சம்பவத்திலும் நல்ல பெயர் எடுக்கும் நோக்கத்தில், இந்த திடீர் மனு செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தை அரசியல் நிபுணர்கள் கிளப்பியுள்ளனர்.பிரியங்கா குற்றச்சாட்டுகாங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘ஒன்றிய உள்துறை இணையமைச்சரின் மகன் சதி செய்து, விவசாயிகளை காரை ஏற்றி நசுக்கி கொன்றதாக போலீசாரும் இப்போது கூறியுள்ளனர்.  இந்த சதியில்  ஒன்றிய உள்துறை இணை அமைச்சருக்குள்ள முழு தொடர்பு குறித்தும் விசாரணை நடத்த வேண்டும். மோடி ஜி அவர்களே… உங்களின் விவசாயிகள் விரோத மனப்பான்மை காரணமாகதான் இந்த அமைச்சரை இதுவரையில் நீங்கள் பதவி நீக்கம் செய்யவில்லை,’ என்று கூறியுள்ளார்….

The post லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை: திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Lakimpur Farmers Massacre ,Special Intelligence Committee ,Ubi ,Union ,minister ,Dinakaran ,
× RELATED என் மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.....