சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முழுவதும் பால் கொள்முதல் விலையை தனியார் நிறுவனங்கள் பெருமளவில் குறைத்துள்ளன. பால் விலை குறைப்பு மட்டுமின்றி, பாலின் தரத்தையும் குறைத்துக் காட்டி குறைந்த விலைக்கு வாங்கி விவசாயிகளை ஏமாற்றுகின்றன. இது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் ஆவின் பால் நிறுவனம் ஒரு லிட்டர் பசும்பாலை ரூ.38க்கும், எருமைப்பாலை ரூ.47க்கும் கொள்முதல் செய்கிறது.
ஆனால் கடந்த சில வாரங்களாக தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதல் விலையை கணிசமாக குறைத்து, ஒரு லிட்டர் பசும்பாலை அதிகபட்சமாக ரூ.29க்குத்தான் கொள்முதல் செய்கின்றன. அதுமட்டுமின்றி, பால் கொள்முதல் செய்யப்படும் அளவையும் தனியார் நிறுவனங்கள் வெகுவாக குறைத்துவிட்டன. தனியார் பால் நிறுவனங்களின் இந்த கொள்ளையை அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. உழவர்கள் உற்பத்தி செய்யும் பாலுக்கு நியாயமான கொள்முதல் விலை கிடைப்பது, பொதுமக்களுக்கு நியாய விலையில் பால் கிடைப்பது,
உழவர்களையும், பொதுமக்களையும் தனியார் நிறுவனம் சுரண்டாமல் தடுப்பது ஆகிய மூன்றும் தமிழக அரசின் கடமை ஆகும். இந்த நிலையை மாற்றி தனியார் பால் நிறுவனங்களின் சுரண்டலைத் தடுக்கவும், உழவர்கள் மற்றும் பொதுமக்களின் உரிமைகளைக் காக்கவும் தமிழ்நாட்டில் பால் விற்பனை ஒழுங்குமுறை ஆணையத்தை அமைக்க வேண்டும். அந்த ஆணையம் நிர்ணயிக்கும் கொள்முதல் விலைக்கு உழவர்களிடம் பால் கொள்முதல் செய்யப்படுவதும், விற்பனை விலைக்கு பொதுமக்களுக்கு சந்தையில் பால் விற்பனை செய்யப்படுவதும் உறுதி செய்யப்பட வேண்டும்.
The post தனியார் நிறுவனங்களின் சுரண்டலை தடுக்க பால் விற்பனை ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை appeared first on Dinakaran.