×
Saravana Stores

புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்த வேண்டும் வழக்கறிஞர் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு: முத்தரசன் அறிக்கை

சென்னை: புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்துவதை நிறுத்த வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: நடைமுறையில் உள்ள இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றின் பிரிவுகளை மக்களுக்கு விரோதமான முறையில் ஒன்றிய அரசு மாற்றியமைத்து, புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளது.

இவற்றுக்கு வழக்கொழிந்த சமஸ்கிருத மொழியில் பெயரிட்டு, அதே தலைப்புகளைத்தான் இந்தியா முழுமையும் பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறது. ஜூலை 1ம் தேதியிலிருந்து இச்சட்டங்களை செயல்படுத்துவதென அறிவித்துள்ளது. இதுபற்றி விவாதித்த, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு “இந்திய அரசியலமைப்புச் சட்டம் சரத்து 348ற்கு எதிரான நடவடிக்கை ஆகும். இதனை உடனடியாக நிறுத்தி வைத்து, முழுமையாக திரும்பப் பெற வேண்டுமென்று” ஒன்றிய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

இதனை வலியுறுத்தி, இன்று கருப்பு தினமாக அனுசரித்து, நீதிமன்றங்களின் வாயில்களில் உண்ணாவிரதம் இருப்பது என்றும், அன்று முதல் ஒரு வாரத்துக்கு மாநிலம் தழுவிய அளவில் நீதிமன்றப் பணியிலிருந்து விலகி இருப்பது என்றும், ஜூலை 2ல் நீதிமன்றங்கள் முன்பும், ஜூலை 3ல் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டங்களை நடத்தவும், திருச்சியில் ஜூலை 8ல் வழக்கறிஞர் பேரணியை நடத்தவும் முடிவு செய்துள்ளது.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு, ஒன்றிய அரசு தன்னிச்சையாக இந்தச் சட்டங்களை நிறைவேற்றியது. இந்தச் சட்டங்களை செயல்படுத்தக் கூடாது என்றும் முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரி, வழக்கறிஞர்கள் நடத்தும் தொடர் போராட்டங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்த வேண்டும் வழக்கறிஞர் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு: முத்தரசன் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Indian Communist ,Mutharasan ,Chennai ,Secretary of State ,Communist Party of India ,Mutdarasan ,Indian Communist Support for Lawyer ,Muttarasan Report ,Dinakaran ,
× RELATED ஈஷா மையம் மீதான புகார்களை முழுமையாக...