சாத்தூர்: சாத்தூர் அருகே, பட்டாசு ஆலையில் நேற்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். 3 அறைகள் தரைமட்டமாயின. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே அச்சங்குளத்தை சேர்ந்தவர் சகாதேவன். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை, சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் உள்ளது. டிஆர்ஓ உரிமம் பெற்ற இந்த ஆலையில், சிறிய ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு 15க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. இதில் அச்சங்குளம், நடுச்சூரங்குடி, பந்துவார்பட்டியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். நேற்று காலை வழக்கம்போல பட்டாசு தயாரிக்க மருந்துகள் கலக்கும் பணியில், அச்சங்குளத்தை சேர்ந்த ராஜ்குமார் (41), நடுச்சூரங்குடியை சேர்ந்த மாரிச்சாமி (40), ஆர்.சத்திரபட்டியை சேர்ந்த செல்வகுமார் (35), மோகன் (31 )அச்சங்குளம் மற்றும் நடுச்சூரங்குடியைச் சேர்ந்த 4 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது உராய்வினால் திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 4 பேரும் உடல் சிதறி பலியாயினர். அருகருகே இருந்த 3 அறைகள் தரைமட்டமாயின. வெடி விபத்து சத்தம் பந்துவார்பட்டியை சுற்றி 3 கி.மீ. தூரத்துக்கு கேட்டதாக தெரிகிறது. இதனால் வெடி விபத்து ஏற்பட்டவுடன் அக்கம்பக்கத்து கிராம மக்கள் பட்டாசு ஆலையில் குவிந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் மற்றும் ஏழாயிரம்பண்ணை தீயணைப்புத்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த 4 தொழிலாளர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சாத்தூர் நகர் போலீசார், தாசில்தார் லோகநாதன், டிஎஸ்பி சுரேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
விபத்து தொடர்பாக, ஆலை உரிமையாளர் சகாதேவன், அவரது மகன் குருபாண்டியன் ஆகியோர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் குரு பாண்டியனை போலீசார் கைது செய்தனர். சகாேதவனை தேடி வருகின்றனர். பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினரிடம் ஆலை சார்பில் தலா ரூ.5 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர்களது குடும்பத்தினருக்கு தலா ₹3 லட்சம் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கி உத்தரவிட்டார். அதன்படி, ₹3 லட்சத்திற்கான காசோலைகளை 4 பேரின் குடும்பத்தினரிடம் கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.
வெடி விபத்து எப்படி?.. கலெக்டர் விளக்கம்
பட்டாசு விபத்து நடந்த ஆலையில் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன், எஸ்பி பெரோஸ்கான் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். ஆய்வுக்கு பின்னர் நிருபர்களிடம் கலெக்டர் பேசுகையில், “பட்டாசு ஆலையில் முன்தினம் மீதம் வைத்த வெடிபொருள் மருந்தினை மீண்டும் உபயோகப்படுத்தியதால் உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களாக 5 குழுக்கள் அமைக்கப்பட்டு பட்டாசு ஆலைகளில் விதிமீறல் நடைபெறுகிறதா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பட்டாசு ஆலைகளில் குத்தகை மற்றும் உள் வாடகைக்கு விடப்பட்ட சுமார் 80க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
The post சாத்தூர் அருகே பயங்கர விபத்து; பட்டாசு ஆலை வெடித்து 4 பேர் பலி: குடும்பத்தினருக்கு தலா ரூ3 லட்சம் முதல்வர் நிதியுதவி appeared first on Dinakaran.