துபாய்: ஈரான் அதிபர் தேர்தலில் முன்னணி வேட்பாளர்களுக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால், 2ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 5ம் தேதி நடக்க உள்ளது. கடந்த மே மாதம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி பலியானார். அந்நாட்டின் அரசியலமைப்பு சட்டப்படி 50 நாட்களுக்குள் தேர்தல் நடத்தி புதிய அதிபர் தேர்வு செய்யப்பட வேண்டும். இதற்காக, அதிபர் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதன் முடிவுகளை தேர்தல் செய்தித் தொடர்பாளர் மொஹ்சென் எஸ்லாமி நேற்று அறிவித்தார். அதன்படி, தேர்தலில் மொத்தம் 2.45 கோடி வாக்குகள் பதிவாகி உள்ளன. இதில், சீர்த்திருத்தவாதிகள் அரசியல் பிரிவு வேட்பாளர் மசூத் பெசெஷ்கியானுக்கு 1.04 கோடி வாக்குகளும், வலதுசாரிகள் அமைப்பை சேர்ந்த சயீத் ஜலிலிக்கு 94 லட்சம் வாக்குகளும், நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாபுக்கு 33 லட்சம் வாக்குகளும், ஷியா பிரிவு மதகுரு முஸ்தபா பூர்மொஹம்மதிக்கு 2.06 லட்சம் வாக்குகளும் கிடைத்துள்ளன.
ஈரான் அரசியலமைப்பின்படி, வெற்றியாளர் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும். இதில் முன்னணியில் உள்ள வேட்பாளர்கள் யாரும் பெரும்பான்மை பலத்தை எட்டவில்லை என்பதால், முதல் 2 இடங்களை பிடித்த மசூத் பெசெஷ்கியான் மற்றும் சயீத் ஜலிலி இடையே வரும் 5ம் தேதி 2ம் கட்ட வாக்குப்பதிவு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஈரான் வரலாற்றில் கடந்த 2005ல் மட்டுமே அதிபர் தேர்தல் 2 கட்டமாக நடத்தப்பட்டுள்ளது. தற்போது 2வது முறையாக இது நிகழ்ந்துள்ளது.
The post முன்னணி வேட்பாளர்களுக்கு பெரும்பான்மை பலமில்லை; ஈரான் அதிபர் தேர்தலில் யாருக்கும் வெற்றி இல்லை: வரும் 5ல் 2ம் கட்ட வாக்குப்பதிவு appeared first on Dinakaran.