×

எதிர்கட்சிகளின் எதிர்ப்பு, சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு தாக்கலுக்கு மத்தியில் 3 புதிய கிரிமினல் சட்டங்கள் நாளை மறுநாள் அமல் : பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க புதிய தொழில்நுட்ப வசதிகள்

புதுடெல்லி: எதிர்கட்சிகளின் எதிர்ப்பு மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு தாக்கலுக்கு மத்தியில் நாடு முழுவதும் நாளை மறுநாள் 3 புதிய கிரிமினல் சட்டங்கள் அமலுக்கு வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க புதிய தொழில்நுட்ப வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட ஆங்கிலேயர் கால சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள், கடந்தாண்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகு ஒன்றிய அரசின் அரசிதழில் கடந்த டிசம்பரில் வெளியானது. இந்நிலையில், மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும் வரும் ஜூலை 1ம் தேதி (திங்கள்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகின்றன.

புதிய குற்றவியல் சட்டங்களின் விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் தொழில்நுட்பத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதால், நாட்டிலுள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் குற்ற வழக்குகளைப் பதிவு செய்யும் தற்போதைய குற்றவியல் கண்காணிப்பு அமைப்புகளின் (சிசிடிஎன்எஸ்) பயன்பாட்டில் 23 செயல்பாட்டு புதுப்பிப்புகளை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய வழிமுறைகளுக்கு தடையின்றி மாறுவதற்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தொழில்நுட்ப உதவியையும் என்சிஆர்பி வழங்கியுள்ளது.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 5,65,746 காவலர்கள், சிறை, தடயவியல், நீதித் துறை அதிகாரிகள் உள்பட 5,84,174 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மூலம் 40 லட்சம் தன்னார்வலர்களுக்கு, 3 புதிய சட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. புதிய சட்டங்களின்கீழ் மின்னணு முறையில் சம்மன் நோட்டீஸ்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வசதியாக, இ-சாக்ஷியா, நியாயஷ்ருதி, இ-சம்மன் ஆகிய 3 செயலிகளை தேசிய தகவல் மையம் (என்ஐசி) உருவாக்கியுள்ளது. நாளை மறுநாள் 3 புதிய கிரிமினல் சட்டங்களை அமல்படுத்துவதற்கான வேலைகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் 3 புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளதாக கூறி எதிர்கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே மேற்கண்ட 3 சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன் உச்ச நீதிமன்றத்தில் புதியதாக மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் புதிதாக இயற்றிய 3 குற்றவியல் சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதேபோல் 3 புதிய சட்டங்களை அமல்படுத்துவதை ஒத்திவைக்க வேண்டும் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் காலனி ஆதிக்கத்தை ஒழிப்பதற்கு மாறாக இந்தி மொழி மேலாதிக்கத்தை புகுத்துவதாக இந்தச் சட்டங்கள் அமைந்துள்ளன என்றும், இந்த சட்டங்களை அமல்படுத்தக் கூடாது என்றும் அகில இந்திய அளவில் வழக்கறிஞர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் குவாலியர் மாவட்ட போலீஸ் எஸ்பி தர்மவீர் சிங் கூறுகையில், ‘மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த சட்டங்கள் குடிமக்களின் உரிமைகள் தொடர்பானது. பாதிக்கப்பட்டவருக்கு நீதி வழங்குவதை அடிப்படையாகக் கொண்டது. வெளிப்படைத்தன்மையுடன் பாதிக்கப்பட்டவருக்கு உரிய நேரத்தில் நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டள்ளது. இந்த சட்டத்தின்படி, பாதிக்கப்பட்ட எந்தவொரு நபரும் தங்களது வீட்டில் இருந்து கொண்டே இ-எப்ஐஆர் மூலம் புகாரை பதிவு செய்யலாம்.

குறிப்பிட்ட காவல்நிலைய எல்லைக்கு உட்பட்டது என்றில்லாமல், எங்கிருந்தும் எந்த மாநிலத்திலும் புகார் அளிக்கலாம். ஜீரோ எப்ஐஆர் முறையில் புகாரை அளிக்கலாம். டிஜிட்டல் ஆவணங்களை புகாரில் தெரிவிக்க முடியும். விசாரணைக்கான கால அவகாசம் குறிப்பிடப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் சாதாரண குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வழிவகுக்கும். புதிய சட்டத்தின்படி 90 நாட்களுக்குள் பாதிக்கப்பட்டவர் அல்லது புகார்தாரருக்கு வழக்கின் முன்னேற்றம் குறித்து விசாரணை அதிகாரி தெரிவிப்பார்’ என்றார்.

The post எதிர்கட்சிகளின் எதிர்ப்பு, சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு தாக்கலுக்கு மத்தியில் 3 புதிய கிரிமினல் சட்டங்கள் நாளை மறுநாள் அமல் : பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க புதிய தொழில்நுட்ப வசதிகள் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,NEW DELHI ,Dinakaran ,
× RELATED எதிர்கட்சிகளின் அழுத்தம், சுப்ரீம்...