×

விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது தானியங்கி மூலம் வழக்குப்பதிவு; காஞ்சிபுரத்தில் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது

காஞ்சிபுரம்: தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அதிகரித்து வரும் சாலை விபத்துகளை குறைக்கவும், உயிரிழப்புகளை தடுக்கவும் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் போக்குவரத்து குற்றங்களை தடுக்கும் வகையில், தொழில்நுட்ப வல்லுநர்கள் உதவியுடன் அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் மூலம் வழக்குப்பதிவு செய்யும் முறை செயல்படுத்தப்படுகிறது.

அதன் முதல்கட்டமாக, காஞ்சிபுரம் காவல் மாவட்டத்தில் மாகரல், உத்திரமேரூர் ஆகிய காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட காஞ்சிபுரம்-உத்திரமேரூர் சாலையில் விதிகளை மீறி அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க நவீன தொழில்நுட்ப காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது வரும் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இதன் மூலம், இன்டலிஜென்ட் டிராபிக் மானேஜ்மென்ட் சிஸ்டத்தின் தானியங்கி தொழில்நுட்பத்தின் மூலம் சாலை விதிகளை மீறும் வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து, பதிவெண்களில் குறிப்பிட்ட அலைபேசி எண்ணில் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். இதில் ஆம்புலன்ஸ், காவல், பாதுகாப்பு மற்றும் அரசு துறை வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

அவசர மருத்துவ தேவைக்காக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு குறுந்தகவல் வந்தால், அவற்றை உரிய ஆவணங்களுடன் 7 நாட்களுக்குள் மாகரல் மற்றும் உத்திரமேரூர் காவல் நிலையங்களில் சமர்பித்தால் மட்டுமே, சம்பந்தப்பட்ட வாகனத்தின்மீது போடப்பட்ட வழக்கு ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்று மாவட்ட எஸ்பி சண்முகம் தகவல் தெரிவித்துள்ளார்.

The post விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது தானியங்கி மூலம் வழக்குப்பதிவு; காஞ்சிபுரத்தில் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது appeared first on Dinakaran.

Tags : Kancheepuram ,Kanchipuram ,Tamil Nadu ,Kancheepuram district ,
× RELATED காஞ்சிபுரத்தில் கள்ளச்சாராய தடுப்பு...