×

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டியலின பேராசிரியைக்கு பதவி மறுப்பு: விசாரணை நடத்த ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறை தலைவர் பதவிக்கு பேராசிரியை தனலட்சுமியை புறக்கணித்து விட்டு, வெங்கடேஸ்வரன் என்பவரை நியமித்து துணைவேந்தர் ஜெகநாதன் ஆணையிட்டுள்ளார். அனைத்து தகுதிகளும் இருந்தும் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதற்காக பதவி மறுக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. மூத்த பேராசிரியரான தனலட்சுமிக்குதான் அப்பொறுப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தகுதியும், பணி மூப்பும் இல்லாத வெங்கடேஸ்வரனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். பெரும் சமூக அநீதியாகும்.

அதுவும் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் நாளையுடன் ஓய்வு பெறவிருக்கும் நிலையில் இத்தகைய ஆணையை பிறப்பிக்க உரிமை இல்லை. இந்த நடவடிக்கை குறித்து விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும். அதுமட்டுமின்றி, ஒன்றிய அரசின் தீனதயாள் உபாத்யாயா திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பட்டியலின மாணவர்களுக்கு திறன் மேம்பாடு வளர்க்கும் திட்டத்தை பெரியார் பல்கலைக்கழகத்தில் செயல்படுத்துவதிலும் பெருமளவில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மாணவர்களுக்கு தங்குமிடமும், உணவும் வழங்காமல் போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு பணம் மோசடி செய்யப்பட்டிருப்பதாகவும், இத்திட்டப்படி பயிற்றுனர்களாக பணியில் சேர்க்கப்பட்ட 17 பேருக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த முறைகேடு குறித்தும் விரிவான விசாரணைக்கு ஒன்றிய, மாநில அரசுகள் ஆணையிட வேண்டும்.

The post சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டியலின பேராசிரியைக்கு பதவி மறுப்பு: விசாரணை நடத்த ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Salem Periyar University ,Ramadas ,Chennai ,Paramaka ,Deputy Minister ,Jehanathan ,Education Department ,Dhanalakshmi ,Venkateswaran ,Ramdas ,Dinakaran ,
× RELATED பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு ராமதாஸ் கண்டனம்..!!