×

இந்த வார விசேஷங்கள்

ஏயர்கோன் கலிக்காம நாயனார் குருபூஜை 29.6.2024 – சனி

கலிக்காம நாயனார் குருபூஜை இன்று. அறுபத்தி மூன்று நாயன் மார்களில் ஒருவர். ஏயர்கோன் கலிக்காம நாயனார் வேளாண் குடியில் அவதரித்த சிவநெறிச் செல்வர். சிவபக்தியில் உயர்ந்தவர். திருமங்கலம் என்னும் தலத்தில்
அவதரித்தவர்.

திருப்புன்கூர் என்ற திருத்தலத்தில் உள்ள பெருமாளுக்கு பல திருப்பணிகள் புரிந்தவர். இவர் மற்றொரு நாயனார் ஆன மானக்கஞ்சாறர் மகளைத் திருமணம் செய்துகொண்டவர்.

சுந்தரமூர்த்தி நாயனாருக்காக பரவையாரிடம் சிவபெருமான் தூது சென்ற செய்தியைக் கேள்விப்பட்டு மிகவும் மனம் வருந்தினார் கலிக்காம நாயனார். சுந்தரமூர்த்தி நாயனார் செயலை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் சுந்தரமூர்த்தி நாயனார் மீது கோபமாகவே இருந்தார்.

இதனை அறிந்துகொண்ட சுந்தரமூர்த்திநாயனார் கலிக்காம நாயனார் கோபத்தை தீர்க்க வேண்டும் என்று திருவாரூர் ஈசனிடம் மனமுருகி வேண்ட, இவர்கள் இருவரையும் இணைத்து வைக்க வேண்டிய ஈசன் ஒரு
திருவிளையாடல் செய்தார்.

கலிக்காம நாயனார் வயிற்றில் சூலை நோய் தந்து சுந்தரமூர்த்தி நாயனாரைப் போய் அதைத் தீர்த்து வைக்கச் சொன்னார். அதன் மூலமாக இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு நட் பாகலாம் என்று நினைத்தார் ஆனால் சுந்தரமூர்த்தி நாயனாரிடம் மிகுந்த கோபத்தோடு இருந்த கலிக்காம நாயனார் அவரைச் சந்திக்க விரும்பாமல் தன்னுடைய வயிற்றில் கத்தியால் கீறி வாழ்வை முடித்துக்கொண்டார்.

கலிக்காமர் இறந்ததைக் கண்டு அவர் மனைவியார் உயிர் விடத் துணிந்த பொழுது சுந்தரமூர்த்தி நாயனார் வருகையை அறிந்து கணவர் உயிர்துறந்த செய்தியை மறைத்து நம்பியாரூரரை எதிர்கொள்ள தம் சுற்றத்தாரை அனுப்பினார். அப்பொழுது சுந்தரமூர்த்தி நாயனார் கலிக்காமரைத் தான் சந்திக்க வேண்டும் என்று சொல்ல அவர் உள்ளே உறங்குகிறார் என்று உறவினர்கள் தெரிவிக்க, சுந்தரர் மனம் ஒப்பவில்லை.

அவருக்கு ஏதோ நடந்திருக்கிறது; அவரை நாம் பார்க்க வேண்டும் என்று சுந்தரமூர்த்தி நாயனார் வற்புறுத்த, அவர்கள் கலிக்காமர் இருந்த அறைக்குள் சென்று காட்டினர்.

அங்கே கலிக்காமர் குடல் சரிந்து கிடப்பதைக் கண்ட சுந்தரர், ‘‘என்னைப் பார்க்க மனமின்றி இவர் இறந்தாரா? இதுவன்றோ அசல் சிவபக்தி. இவர் வாழ்வு முடிய நான் காரணமாகலாமா? இவரைப் பார்க்க முடியாத நானும் இப்பொழுதே உயிர் துறப்பேன் என்று தம்முடைய கையில் உள்ள வாளை எடுத்து தன்னை மாய்த்துக் கொள்ள முயலும் போது இறைவன் அருளால் கலிக்காமர் உயிர் பெற்று எழுந்தார்.

‘‘சுந்தரமூர்த்தி நாயனாருடைய வாளைப் பிடித்துக்கொள்ள ஆரூரர் விழுந்து வணங்கினார். கலிக்காமரும் நம்பியாரூரர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். இருவரும் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு நண்பர்கள் ஆயினர். இருவரும் இணையாக சென்று திருப்புன்கூர் பெருமான் திருவடிகளை வணங்கிப் போற்றினார்கள் பின் திருவாரூர் சென்று பெருமானை வழிபட்டனர். அமங்கலம் நேர்ந்த இடத்தும் சிவத்தொண்டர் வந்தால், அவரை மங்களமாக எதிர்கொண்டு வரவேற்று உபசரித்தல் முறைமை என்பதை உணர்ந்தவர் கலிக்காம நாயனாரின் மனைவியார்.

ஏகாதசி 2.7.2024 – செவ்வாய்

மாந்தாதா என்ற ஒரு அரசன் நன்றாக ஆண்டுகொண்டிருந்தான். ஒரு முறை மழை பொய்த்துப்போனது. பயிர்கள் காய்ந்து வாடின. கால்நடைகள் தண்ணீருக்குத் தவித்தன.

மக்கள் உணவின்றி கொடும் பஞ்சத்திற்கு ஆளானார்கள். மாந்தாதா ஆங்கீரஸ முனிவர் என்ற முனிவரைச் சந்தித்தான். மக்கள் படும் இன்னல்களைச் சொல்லித் தீர்வு கேட்டான் ஆங்கீரஸ முனிவர் மன்னனைக் கருணையோடு பார்த்தார். ‘‘உன்னுடைய அன்பு உள்ளத்திற்கு நாட்டிலே நிச்சயம் மறுபடியும் மழை பெய்யும். நான் ஒரு விரதம் சொல்லுகிறேன். இம்மாத வளர்பிறை ஏகாதசியை அனுசரி. இந்த ஏகாதசிக்கு சயன ஏகாதசி என்று பெயர். வழக்கமான ஏகாதசியை விட, சக்தி வாய்ந்தது. மன்னன் விரதமிருந்து நல்வாழ்வை அடைந்தான்.

இந்த ஏகாதசியால் இழந்தது எல்லாம் மறுபடியும் கிடைத்துவிடும். சன்னியாசிகள் சாதுர்மாஸ்ய விரதம் துவங்கக் கூடிய காலக் கட்டத்தில் வருகின்ற ஏகாதசி. பித்தளை, வெள்ளியால் செய்யப்பட்ட விளக்கை, ஒரு தட்டின் நடுவில் வைத்து, விளக்கில் நெய் ஊற்றி, திரியிட்டு, தீபம் ஏற்றி, வேதம் கற்றவருக்குத் தானமாகத் தந்தால், ஞானமும் செல்வமும் கிடைக்கும்.

வழக்கம்போல முதல் நாளாகிய தசமி திதி அன்று இரவு உணவைத் தவிர்த்து விடவேண்டும். மறுநாள் காலையில் நீராடி, பெருமாளை வணங்க வேண்டும். விஷ்ணு சகஸ்ரநாமம் முதலிய நூல்களைப் பாராயணம் செய்யவேண்டும். மாலை திருமால் ஆலயத்துக்குச் சென்று வணங்கி வலம் வர வேண்டும். அப்படிச் செய்வதன் மூலமாக ஏகாதசியின் முழுப் பலனையும் நாம் அடைய முடியும்.

ஆவுடையார் கோயில் ஆனிப் பெருவிழா திருக் கொடியேற்றம் 2.7.2024 – செவ்வாய்

திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தேவாரப் பாடல் பெற்ற சிவன் கோயில் ஆகும்.

திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும். இங்குதான் மாணிக்கவாசகர் திருவாசகம் இயற்றினார். 1100 ஆண்டுகளுக்கு முந்தைய கோயில் இது.

திருவாரூர், திருநெல்வேலி, ஆவுடையார்கோயில் ஆகிய ஊர்களில் உள்ள தேர்கள்தான் தமிழகத்தில் உள்ள கோயில்களின் தேர்களில் மிகவும் பெரிய தேராகும்.

இந்த தேர்ச்சக்கரத்தின் குறுக்களவு மட்டும் 90 அங்குலம் ஆகும். சக்கரத்தின் அகலம் 36 அங்குலமாகும். 50 முதல் 500 பேர் வரை கூடினால் எந்தத் தேரையும் இழுத்து விடலாம்.

ஆனால் இந்த ஆவுடையார்கோயில் தேரை சுமார் 5000 பேர் கூடினால்தான் இழுக்க முடியுமாம். கல்லோ – மரமோ – காண்போர் வியக்கும் சித்திர வேலைப்பாடு கொண்ட திருக்கோயில்.

உயிர்த்துடிப்பு ஒன்றைத் தவிர மற்ற எல்லா அம்சங்களும் இங்குள்ள சிலைகளில் உள்ளன என்று கூறியுள்ளார்கள். அந்த அளவிற்கு ஈடு இணையற்ற கவிபாடும் கற்சிலைகள் இங்கே ஒவ்வொரு தூண்களிலும் நிறைந்து விளங்குகின்றன. இங்குள்ள எல்லா உருவச்சிலைகளிலேயும் காலில் உள்ள நரம்பு கூட வெளியே தெரிகின்றன. சிலைகளின் தலைமுடி கூட சன்னமாக அளந்து நீவி விடப்பட்டுள்ளன.

தமிழகத்திலுள்ள ஆலயங்கள் எல்லாவற்றிலுமே உருவ வழிபாடுதான் நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்த ஆத்மநாதர் ஆலயத்தில் மட்டுந்தான் அருவ வழிபாடு நடைபெற்று வருகிறது. மூலஸ்தானத்தில் எந்த விதச் சிலையும் கிடையாது.

ஆவுடையார் என்னும் பீடம் இருக்கும், லிங்கத் திரு உரு இருக்காது. அம்பிகை சந்நதியிலும் அப்படியே. இறைவனுக்கும் இறைவிக்கும் உருவம் என்று ஒன்று இல்லை. இறைவன் திருப்பெயர், ஆத்மநாதர்; இறைவி பெயர் யோகாம்பிகை. இருவரும் அந்தர்யாமியாகத்தான் இங்கு எழுந்தருளியிருக்கிறார்கள். இருவருக்கும் இருக்கும் பீடம் இருக்கிறது.

அதற்கே அபிஷேக ஆராதனைகள் எல்லாம். அப்படிப் பீடமாகிய ஆவுடையார்க்கே முக்கியத்துவம் கொடுத்து, பூசை நடப்பதினால் தான் ஆவுடையார் கோயில் என்று வழங்குகிறது. கோயிலுக்கு முன் ஒரு பெரிய குளம் இருக்கிறது. அதை நெல்லியடி தேவதீர்த்தம் என்கிறார்கள்.

எல்லா ஆலயங்களிலும் பூசை நடைபெறும்போது பச்சை அரிசியிலே அமுது படைத்து நெய்வேத்தியம் செய்வார்கள். ஆனால் இந்த ஆவுடையார் கோயிலிலே 6 காலத்திற்குமே புழுங்கல் அரிசியால்தான் அமுது படைக்கப்படுகிறது.
அதோடு பாகற்காய் கறியும் கீரையும் சேர்த்துப் படைக்கப் படுவது இங்கு மட்டும்தான். நரியைப் பரியாக்கியது இத்தலபுராணத்தின் பெருமையாகும். இந்த ஆவுடையார் கோயிலிலே தாவும்பரி என்று ஒரு குதிரை கல்லில்
செதுக்கப்பட்டுள்ளது.

அந்தக் குதிரை மீது சிவபெருமான் அமர்ந்து வருவது போல செய்யப்பட்டுள்ளது. குதிரையின் அமைப்பு ஒவ்வொன்றாய்ப் பார்த்தால் உயிர்க்குதிரையோ என்று தோன்றும். இந்த ஆவுடையார்கோயில் ஆத்மநாதர் ஆலயத்தில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய திருவாசகம் மற்றும் திருக்கோவையார் ஓலைச்சுவடிகள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இத்தனைச் சிறப்பு பெற்ற ஆவுடையார் கோயிலில் ஆனிப் பெருவிழா திருக்கொடியேற்றம் இன்று துவக்கம். தொடர்ந்து பத்து நாள்கள் திருவிழா கோலாகலமாக நடைபெறும்.

பிரதோஷம் 3.7.2024 – புதன்

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4:30 முதல் 6:00 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. இந்த பிரதோஷம், சிறப்பாக அனைத்துக் கோயில்களிலும் கொண்டாடப்படுகிறது. பிரதோஷத்தன்று வழிபாடு செய்தால் நாம் எண்ணிய விரும்பிய பலன்கள் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள். இன்று புதன்கிழமை.

பொன்னான ரோகிணியும் மிருக சீரிஷமும் கலந்த தினம். ‘‘பிற தோஷங்கள் நீங்க வேண்டுமானால் பிரதோஷ வழிபாடு செய்’’ என்று சொல்வார்கள். ஆனி மாதத்தில் அதாவது தேவர்களின் மாலை நேரம், கிட்டத்தட்ட பிரதோஷ வேலை நேரத்தில் புதன் பிரதோஷம் வருவது இந்த ஆண்டில் மிக முக் கியமான ஒரு நிகழ்வு. சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது.

ஆதியில் அமுதம் கடைந்தபோது அதில் எழுந்த ஆலகால விடத்தை உண்ட சிவபெருமான் மீண்டும் எழுந்து ஆனந்தத் தாண்டவம் ஆடினார். அது ஒரு திரயோதசி திதி தினம்.

பிரதோஷ தினத்தன்று சிவவழிபாடு செய்தால், அஷ்டமச் சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டமச்சனி, ஏழரை நாட்டுச் சனி, சனி திசை மற்றும் புத்திகள் தரும் கெடுபலன்களிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம். சிவனை வழிபடுபவர்களை சனிபகவான் தொல்லை செய்வதில்லை. தான, தர்மங்களை செய்ய பிரதோஷம் மிகவும் சிறந்த நாளாக கருதப்படுகிறது. இன்றைய நாளில் நீங்கள் செய்யும் சிறு தானம் கூட பெருமளவு பலன்களைக் கொடுக்கக் கூடியது.

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் தெப்போற்சவம் 5.7.2024 வெள்ளி

திருவள்ளூர், வீரராகவ பெருமாள் கோயில், 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இங்கு, ஆனி மாதத்தை முன்னிட்டு, மூன்று நாள் தெப்ப உற்சவம் நடைபெறும் அப்போது சுவாமிக்கு முத்தங்கி சேவை நடைபெற்று இரவு கோயில் திருக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும்.

29.6.2024 – சனிக்கிழமை திருத்தணி முருகப்பெருமானுக்குப் பாலபிஷேகம்.
2.7.2024 – செவ்வாய்க்கிழமை கார்த்திகை.
5.7.2024 – வெள்ளிக்கிழமை அமாவாசை.
5.7.2024 – வெள்ளிக்கிழமை ராமேஸ்வரம் ஸ்ரீபர்வத வர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி – அம்பாள் தங்கப் பல்லக்கில் பவனி.

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Kalikama ,Gurupuja ,Nayan ,Aergon ,Kalikama Nayanar ,Shiva ,Bhakti ,Tirumangalam.… ,
× RELATED ராசிபுரம் கைலாசநாதர் கோயிலில் நாயன்மார்களுக்கு குருபூஜை