*தொழிலாளர்கள் மகிழ்ச்சி
வால்பாறை : வால்பாறை பகுதியில் உள்ள தேயிலைத்தோட்டங்களில் கவாத்து பணிகள் முடிவடைந்த நிலையில் தென்மேற்கு பருவ மழையை எதிர்பார்த்து புதிய தேயிலை நாற்று நடும் பணி தொடங்கி உள்ளது. வால்பாறையில் பிரதான தொழில் தேயிலை தொழிலாகும். தேயிலை தொழிலை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இங்கு, திருநெல்வேலி, திருச்சி, திண்டுக்கல், சேலம் மாவட்டங்களிலிருந்து அதிகமான தொழிலாளர்கள் தேயிலை தோட்டங்களில் வேலை செய்து வருகிறார்கள்.வால்பாறை பகுதியில் மானாம்பள்ளி வனச்சரகம் 13,876.18 ஹெக்டேர் நிலப்பரப்பில் உள்ளது. வால்பாறை வனச்சரகம் 17,150.38 ஹெக்டேர் நிலப்பரப்பில் உள்ளது.
இதனிடையே மலைச்சரிவுகளில் பல தனியார் நிறுவனங்கள் தேயிலை செடிகளை 12,687.00 ஹெக்டேர் நிலப்பரப்பில் தேயிலை பயிரிட்டுள்ளனர். இந்நிலையில், வால்பாறை பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வெயிலின் தாக்கம் அதிகளவு இருந்தது. இதனால் தேயிலை செடிகள் கருகின. பல எஸ்டேட்களில் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் இருந்து வந்தனர். தற்போது வால்பாறையில் கன மழை பெய்து வருவதால் தேயிலை செடிகள் துளிர்விட்டு வருகிறது. மேலும், மழை தொடங்குவதற்கு முன்னால் தேயிலை செடிகளை கவாத்து செய்வது வழக்கம்.
இந்நிலையில், பருவ மழைக்கு முன் செடிகளை கவாத்து செய்தனர். தற்போது பருவ மழை பெய்து வரும் நிலையில் புதிய நாற்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இளம் தேயிலை இலைகளில் இருந்து தேயிலை தயாரித்தால் சுவை அதிகம் கிடைக்கும் என்பதால் முதிர்வயது செடிகளை பிடுங்கி எடுத்து விட்டு புதிய நாற்று நடும் பணிகள் பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் தொடங்கப்பட்டு உள்ளது. புதிய நாற்று நடவும் பணிகளில் தொழிலாளர்கள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகிறார்கள்.
The post வால்பாறையில் தென்மேற்கு பருவமழை எதிரொலி தேயிலை நாற்று நடவு பணி தீவிரம் appeared first on Dinakaran.