×

தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் வாரம் ஒரு மண்டலத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படும்

*மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சியில் நான்கு மண்டலங்களிலும் வாரம் ஒரு மண்டலத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்படும் என மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடந்தது. ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேயர் ஜெகன் பெரியசாமி கூட்டத்தை தொடங்கி வைத்து பேசுகையில், ‘தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு படி மாநகராட்சிக்குட்பட்ட 60வது வார்டு பகுதிகளிலும் பாரபட்சமின்றி சாலை, கால்வாய் உள்பட அடிப்படை பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

இன்னும் இருக்கின்ற சில பணிகளும் 3மாதத்திற்குள் முடிக்கப்படும். மாசு இல்லாத மாநகரை உருவாக்கும் வகையில் எல்லா பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. தருவைகுளம் குப்பை கிடங்கு பகுதிகளில் 70 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அதனை ஒரு லட்சமாக மாற்றுவதற்கான பணிகள் நடைபெறுகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மக்கள் நலன் கருதி சில பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி விரிவான சாலையை உருவாக்கியுள்ளோம்.

விஇரோடு, அண்ணாநகர் ரோடு சாலைகளில் இருபுறமும் பார்க்கிங் வசதிக்கும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் 7 ஆயிரம் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு அவர்களும் வியாபாரம் செய்து வருகின்றனர். அந்த பகுதிகளிலும் இதனால் இடையூறுகள் ஏற்படும் என்றால் அதையும் ஒழுங்குப்படுத்தி சீரமைக்கப்பட்டு விபத்துக்கள் இல்லாத மாநகரை உருவாக்குவோம். அதேபோல் பழுதடைந்துள்ள பூங்காக்கள் சீரமைக்கப்பட்டு புதிய பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பொதுமக்கள் பல்வேறு வகையில் பலனடைந்துள்ளனர். முத்துநகர் கடற்கரை, ரோச்பூங்கா போன்றவைகளும் நல்லமுறையில் செயல்பட்டு வருகின்றன. தொடர்ந்து அனைவரும் இனைந்தே மக்கள் பணியாற்றுவோம் என்றார்.

அதன்பின் கூட்டத்தில், தூத்துக்குடி கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட ரோச் பூங்கா வளாகத்தில் சர்க்கஸ், கூட்டரங்கங்கள் மற்றும் பொதுமக்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்காக வாடகைக்கு விடுவது, பல்வேறு பணிகளில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வருபவர்களின் பணியை மேலும் ஒர் ஆண்டிற்கு நீட்டிப்பது என்பது உள்ளிட்ட 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனையடுத்து திமுக மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ், கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், நாகேஸ்வரி, வைதேகி, முத்துவேல், இசக்கிராஜா, ரெங்கசாமி, கந்தசாமி, ஜெயசீலி, ரெக்ஸின், ஜான், காங்கிரஸ் கவுன்சிலர் சந்திரபோஸ், சிபிஎம் கவுன்சிலர் முத்துமாரி, இந்தியயூனியன் முஸ்ஸீம் லீக் கவுன்சிலர் மும்தாஜ், மதிமுக கவுன்சிலர் ராமு அம்மாள் உள்ளிட்டோர் தங்களது பகுதிகளில் நிறைவேற்றிய பணிகளுக்கு நன்றி தெரிவித்தும் நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்தும் பேசினர்.

மாநகராட்சி மண்டலத்தலைவர் கலைச்செல்வி, கவுன்சிலர்கள் பொன்னப்பன், ராஜேந்திரன், பட்சிராஜ், காங்கிரஸ் கவுன்சிலர் கற்பகனி, உள்ளிட்டோர் கோரிக்கை மனுக்களை மேயர் மற்றும் ஆணையரிடம் வழங்கினர்.தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில், மக்கள் பயன்பாட்டிற்காக முக்கிய பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளும் முழுமையாக முடிவுபெற்றுள்ளது. சிறிய குறுகலான சந்துக்கள் பகுதி மட்டும் சாலைகள் அமைக்கப்பட வேண்டியுள்ளது. சில இடங்களில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

நீங்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் குறிப்பெடுக்கப்பட்டு எதற்கு முக்கியத்துவம் என கண்டறியப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாக செய்து கொடுக்கப்படும். இதற்கிடையில் 60வது வார்டு பகுதிகள் உள்ள மாநகராட்சி பகுதியில் 30 வார்டுகளில் முழுமையாக 100 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதை தவிர்த்து சில குறைபாடுகள் புகாராகவும், தகவல்களாகவும் வரப்பெற்றுள்ளது. நாம் கடந்த காலங்களில் மிகப்பெரிய மழை வௌ்ளம் எல்லாவற்றிலும் கடந்து பணியாற்றியுள்ளோம்.

மேலும் நான்கு மண்டலம் பகுதிகளிலும் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு மண்டலத்தில் புதன்கிழமை தோறும் ஒரு பகுதியை தேர்வு செய்து அந்த இடத்தில் நான், ஆணையர் உள்பட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்ளும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறும். அதில் மாநகராட்சிக்கு சம்பந்தப்பட்ட குறைகள் ஏதுவாக இருந்தாலும் உடனடியாக அந்த இடத்தில் தீர்த்து வைக்கப்படும் என்றார்.

கூட்டத்தில் துணை

ஆணையர் ராஜாராம், செயற்பொறியாளர் பாஸ்கர், உதவிசெயற்பொறியாளர் சரவணன், உதவி ஆணையர்கள் தனசிங், சுரேஷ்குமார், கல்யாணசுந்தரம், சொர்ணலதா, ஸ்மார்ட் சிட்டி திட்ட செயற்பொறியாளர்கள் ராமசந்திரன், ரெங்கநாதன், நகர்நல அலுவலர் டாக்டர் தினேஷ், சுகாதார ஆய்வாளர்கள் ஹரிகணேஷ், ராஜசேகர், ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜபாண்டி, கவுன்சிலர்கள் ஜாக்குலின் ஜெயா, சரவணக்குமார், ஜான்சிராணி, விஜயக்குமார், ராஜதுரை, கண்ணன், தெய்வேந்திரன், தனலட்சுமி, விஜயலட்சுமி, மெட்டில்டா, சுப்புலட்சுமி, சுதா, விக்டர், சரண்யா, அதிஷ்டமணி, சோமசுந்தரி, பேபி ஏஞ்சலின் உள்பட கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் வாரம் ஒரு மண்டலத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படும் appeared first on Dinakaran.

Tags : Thoothukudi Corporation ,Mayor ,Jagan Periyasamy ,Thoothukudi ,Thoothukudi Municipal Corporation ,
× RELATED நாய் கடித்த சிறுவனிடம் நலம்...