×

ஜவ்வாதுமலையில் உள்ள கிராமங்களில் கி.பி.10ம் நூற்றாண்டு நடுகற்கள் கண்டெடுப்பு

*விஜயநகர மற்றும் பல்லவர் காலத்தை சேர்ந்தது

திருவண்ணாமலை : ஜவ்வாதுமலை பகுதியில் உள்ள மலை கிராமங்களில் கி.பி. 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் ச.பாலமுருகன் மற்றும் சி.பழனிசாமி, சிற்றிங்கூர்ராஜா, நந்தகுமார் ஆகியோர்கள் கொண்ட குழுவினர் ஜவ்வாதுமலை பகுதியில் கல்வெட்டுக்கள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, ஜவ்வாதுமலை தாலூர் கிராமத்தில் 2 விஜயநகர காலகல்வெட்டுகளும், எருக்கம்பட்டு கிராமத்தில் ஒரு பல்லவர் கால நடுகல் கல்வெட்டும், பாடானூரில் கி.பி. 10ம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டும் கண்டெடுக்கப்பட்டன. இக்கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ள விபரங்களை வாலாஜா பா.வெங்கடேசன், கல்வெட்டு அறிஞர் ராஜகோபால் ஆகியோர் படித்தளித்தனர்.
இதுகுறித்து, வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் பாலமுருகன் தெரிவித்திருப்பதாவது:

ஜவ்வாதுமலை தாலூர் கிராமத்தில் நிலத்தில் உள்ள பலகைக் கல்லில் உள்ள விஜயநகர கால கல்வெட்டு கிருஷ்ண தேவ மகாராயர் காலத்தை சேர்ந்ததாகும். கிருஷ்ண தேவ மகாராயரின் காரியத்து கடவரான மனுக மநாயக்கர் அதியன் வரதன் என்பவர் தென்மலையாள நாட்டு செவபுரம் வெள்ளைகவுண்டனுக்கும், மலியகவுண்டனுக்கும் மறமுண்டன்கவுண்டனுக்கும் கல் ஏரிநாட்டுவர்க்கும் ஏற்பட்ட ஒப்பந்தம் குறித்த தகவல் கல்வெட்டாக வெட்டப்பட்டுள்ளது.

மேலும், மற்றொரு கல்வெட்டு ஒருபக்கம் மட்டுமே கிடைக்கிறது. அதில், கோட்டுத்தலைப்பற்று நாட்டுக்கும் தேவர் தந்த திருமுகப்படிக்கும் நான் தந்த ஓலைப்படி செய்ய வேண்டிய கடமைகள் குறித்தும், அவ்வனார் குடிக்கு நாலு பணமும் பருவருக்கு 2 பணமும் கொடுக்க வேண்டியது என்றும் அந்த கல்வெட்டு குறிப்பிடுகிறது.

எருக்கம்பட்டு கிராமத்தில் கிடைக்கப் பெற்ற நடுகல் கல்வெட்டில் வீரன் வலது கையில் குறுவாளும் இடது கையில் வில்லும் ஏந்தியவாறு சண்டைக்கு தயார் நிலையில் உள்ளதை காட்டுகிறது. இந்த சிற்பத்தின் மேற்பகுதியிலும், வலப்புறத்திலும் கல்வெட்டுகள் சிதைந்த நிலையில் உள்ளன. மேற்பகுதியில் கோவிசைய என்ற வார்த்தையும் வலது புறத்தில் சிதைந்த நிலையில் எழுத்துக்களும் காணப்படுகின்றன. அதன் சிற்ப அமைப்பின் அடிப்படையில், பிற்கால பல்லவர்கள் காலத்தை சேர்ந்ததாக கருதலாம். நம்மியம்பட்டு அடுத்த பாடானூர் கிராமத்தில், ஊருக்கு வெளிப்புறமாக கிழக்கு நோக்கிய நடுகல்லில் வலது கையில் குறுவாளும் இடதுகையில் வில்லும் கொண்டு வீரன் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. உருவத்தின் மேற்பகுதியில், கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. அது சிதைந்திருக்கிறது.

அதன்படி, மலை நாட்டை சார்ந்த மங்கல முடைய தூலுர் என்ற ஊரை ஆண்டு வந்த எற்கருமான் என்பவர் பூசலில் சண்டையிட்டு இறந்து போயுள்ளார். அவரின் நினைவாக இந்த நடுகல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நடுகல்லை பட்டான் சாமி என்று அப்பகுதி மக்கள் வணங்கி வருகின்றனர். பட்டான் சாமி என்பது இறந்தவர் நினைவாக வைக்கப்பட்ட கடவுள் என்ற பொருளில் அவ்வூர் மக்கள் வணங்குகின்றனர்.

ஜவ்வாதுமலையில் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சியான வரலாற்றுத் தடயங்களை திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் ஆய்வு செய்து ஆவணப்படுத்தி வருகிறது. அதில், கிடைக்கக்கூடிய கல்வெட்டுகள் அவ்வூர் உள்ளுர் வரலாற்றையும் வழக்காறுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. மேலும், மலையின் பல இடங்களில் கல்வெட்டுடன் கூடிய நடுகற்கள் கிடைத்து வருகின்றன. அவை, ஜவ்வாதுமலையின் வரலாற்று பொக்கிஷமாகும். வரலாற்று ஆய்வுக்கும், பண்பாட்டு ஆய்விற்கும் முக்கியமான இக்கல்வெட்டுகளை முறையாக ஆவணப்படுத்தி பாதுகாக்க வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post ஜவ்வாதுமலையில் உள்ள கிராமங்களில் கி.பி.10ம் நூற்றாண்டு நடுகற்கள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Javvadumalai ,Tiruvannamalai ,Javvadumalai region ,Thiruvannamalai District Historical Research Center ,S. Palamurugan ,C. Palanisamy ,Chitingurraja ,Nandakumar ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து...