×

ஆர்.எஸ்.மங்கலம் அருகே குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பி ஆன விவசாயி மகன்

*தமிழ் வழி கல்வியில் சாதித்ததாக பெருமிதம்

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று விவசாயி மகன், டிஎஸ்பி ஆகி சாதித்துள்ளார்.ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே குயவனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கருப்பையா. இவரது மகன் கேசவன்(33). ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் தனது ஆரம்பக்கல்வியை குயவனேந்தலில உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியை ஆட்டாங்குடி அரசு உயர்நிலைப்பள்ளியிலும், 11 மற்றும் 12ம் வகுப்புகளை ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் படித்தார். அதன் பிறகு காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றதோடு, முனைவர் பட்டமும் பெற்றார். பின்னர் அரசு பணியில் சேர்ந்தால் குடும்பத்தின் வறுமையை போக்கலாம் என்ற இலக்கோடு படித்து, குரூப்-1 தேர்வுக்கும் விடாமுயற்சியுடன் படித்து டிஎஸ்பி பணிக்கு தேர்வாகியுள்ளார்.

இதுகுறித்து கேசவன் கூறுகையில், “நான் ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவன் என்பதால் சிறு வயது முதல் படிப்பில் நன்கு கவனம் செலுத்தினேன். ஆசிரியர்கள், பெற்றோர்கள் சொல்படி நடந்து படித்து வந்தேன். அதன் விளைவாகத்தான் இன்று இந்த நிலையை எட்டியுள்ளேன். இதேபோல் கிராமப்புறங்களில் உள்ள மற்றவர்களும் வெற்றி பெற வேண்டும் என்பது எனது ஆசை. பொதுவாக மாணவர்கள், இளைஞர்கள் அன்றாட நிகழ்வுகளை தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக தினசரி செய்தித்தாள்கள் படிப்பதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். தமிழ் வழி கல்வியில் பயின்றாலும் சாதிக்கலாம் என்பதற்கு நானும் ஒரு எடுத்துக்காட்டு.

ஆகையால் தமிழ் வழி கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும். தற்போது தமிழக அரசே ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பயிற்சி கொடுத்து வருகின்றனர். தமிழக அரசின் அகில இந்திய குடிமை பணி தேர்வு மையம் சென்னையில் உள்ளது. அங்கு மாணவர்களுக்கு இலவச பயிற்சி, தங்குமிடம், உணவு உள்ளிட்டவை இலவசமாக கிடைக்
கிறது. இதனை மாணவர்கள் சரியாக பயன்படுத்தி வெற்றி பெறலாம்’’ என்றார்.

The post ஆர்.எஸ்.மங்கலம் அருகே குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பி ஆன விவசாயி மகன் appeared first on Dinakaran.

Tags : RS Mangalam ,RS ,Mangalam ,Karupiya ,Kuyavanendal ,Ramanathapuram district ,Kesavan ,
× RELATED சாலையின் நடுவே இடையூறாக மின் கம்பம்