தஞ்சாவூர், ஜூன் 29: தஞ்சையில் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரியின் வீட்டில் வெள்ளிப் பொருட்கள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி.காலனி பகுதியில் உள்ள கல்யாணசுந்தரம் நகரை சேர்ந்தவர் பார்த்த சாரதி (68). தஞ்சை மின்வாரியத்தில் உதவிப் பொறியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டி விட்டு மருமகளின் வளை காப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மதுரைக்கு சென்றார். பின்னர், நேற்று முன்தினம் திரும்பி வந்து பார்க்கும்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்த துணிமணிகள் சிதறி கிடந்தன.
மேலும், பீரோவில் இருந்த வெள்ளி குங்குமச்சிமிழ், டம்ளர் உள்ளிட்ட 30 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. மர்மநபர்கள் யாரோ வீடு புகுந்து திருடிச் சென்றது தெரியவந்தது.
தகவலின் பேரில் தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழக போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
The post ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரி வீட்டில் வெள்ளி பொருட்கள் திருட்டு: போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.