×

ஓய்வூதிய தொகை வரவில்லை என சிலரின் தூண்டுதலின் பேரில் தாசில்தார் அலுவலகத்தில் முதியவர் பெட்ரோல் கேனுடன் போராட்டம்: போலீசில் புகார்

தாம்பரம்: குரோம்பேட்டை, ராதா நகர், கிருஷ்ணமாச்சாரி தெருவை சேர்ந்தவர் நரசிம்மன் (88). இவர் கடந்த 2023ம் ஆண்டு முதியோர் உதவித்தொகை பெற விண்ணப்பத்துள்ளார். கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம், 22ம் தேதி, இதற்கான ஆணை வழங்கப்பட்ட நிலையில், இதுவரை அவருக்கு உதவித்தொகை வராததால் பல்லாவரம் தாசில்தார் அலுவலகத்திற்கு தொடர்ந்து சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் பெட்ரோல் கேனுடன் அதே பகுதியை சேர்ந்த சிலருடன் தாசில்தார் அலுவலகம் சென்ற நரசிம்மன் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் மீண்டும் நேற்று சிலருடன் தாசில்தார் அலுவலகம் சென்ற நரசிம்மன் அங்கு போராட்டம் நடத்தி உள்ளார். அவரிடம் பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் விசாரணை நடத்தினார். அப்போது, உதவித்தொகை விண்ணப்பித்து அது இதுவரை வரவில்லை என கூறியுள்ளார். இதனை அடுத்து அதற்கான ஆணை நகலை நரசிம்மனிடம், தாசில்தார் கொடுத்தார். அப்போது முதியவரிடம் இருந்த பெட்ரோல் கேனை பார்த்த தாசில்தார், கேனில் பெட்ரோல் எங்கே வாங்கினீர்கள் என கேட்டபோது அது அஸ்தினாபுரம் பிரதான சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் என தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, விதிகளை மீறி கேனில் பெட்ரோல் விற்பனை செய்த பெட்ரோல் பங்கிற்கு நரசிம்மனுடன் ஆட்டோவில் சென்ற தாசில்தார் ஆறுமுகம், தலைமையிலான வருவாய் துறையினர் அந்த பெட்ரோல் பங்கிற்கு சீல் வைத்தனர். மேலும் இதுகுறித்து தாசில்தார் ஆறுமுகம் சிட்லபாக்கம் காவல் நிலையத்தில், ஓய்வூதிய உத்தரவு பெற்ற பிறகும், ஓய்வூதிய தொகை வரவில்லை என சிலரின் தூண்டுதலின் பேரில் முதியவர் போராட்டத்தில் ஈடுபட்ட அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்தார். அப்போது, இது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டேன் என மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்ததின் பேரில் முதியவர் நரசிம்மனை போலீசார் அனுப்பி வைத்தனர்.

The post ஓய்வூதிய தொகை வரவில்லை என சிலரின் தூண்டுதலின் பேரில் தாசில்தார் அலுவலகத்தில் முதியவர் பெட்ரோல் கேனுடன் போராட்டம்: போலீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : Dasildar ,Tambaram ,Narasimman ,Krombetta ,Radha Nagar, Krishnamachari Street ,Dinakaran ,
× RELATED வெல்டிங் தீப்பொறி விழுந்து விபரீதம்:...