×

கல்வியில் புரட்சி செய்வதில் இந்தியாவிற்கே வழிகாட்டியாக தமிழ்நாடு விளங்க வேண்டும்: விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் பேச்சு


சென்னை: பன்னாட்டு தமிழ் தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி என்ற தலைப்பில், 2 நாள் கருத்தரங்கம் சென்னை வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. இதில், சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சஞ்சய் குமார், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், எத்திராஜ் கல்லூரி துணை வேந்தர் மைக் முரளிதரன், தென்னிந்தியாவின் துணை தூதர்கள் டேவிட் எக்லெஸ்டன், சரவண குமார், ரஷ்ய நாட்டின் தூதர் செர்ஜிவி அசாரோவ் ஆகியோர் கலந்து கொண்டு தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து பேசினர். சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சஞ்சய் குமார் பேசுகையில், ‘‘சைபர் க்ரைம் தொடர்பாக மாணவிகள் புகாரளிக்க 1930 என்ற எண்ணில் தொடர்புகொள்ள வேண்டும்,’’ என்றார்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் பேசுகையில், ‘‘புதிய தொழில்நுட்ப வளர்ச்சியால் எதிர்காலத்தில் பலமாற்றம் ஏற்படும். மனிதன் சிறு உதவிக்கு கூட இயந்திர உதவியை நாட வேண்டி இருக்கும்,’ என்றார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் பேசியதாவது: கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி போன்றவை அசுர வளர்ச்சி கண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு, சைபர் செக்யூரிட்டி, டேட்டா சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி என பலவிதமான படிப்புகள் வரவேற்பை பெற்றுள்ளது. மாணவர்கள் கல்வி, வேலை வாய்பு சம்பந்தமாக அனைத்து தகவல்களையும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
எல்லாவற்றிலும் பெண்களுக்கு சமபங்கு அளிக்க வேண்டும். பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு 1996ல் தேவகவுடா பிரதமராக இருந்தபோது தாக்கல் செய்யப்பட்டு, இப்போதான் நிறைவேற்றப்பட்டு இருக்கு. அதை எப்போது நடைமுறைப்படுத்த போகிறார்கள், என தெரிவில்லை. பள்ளிக்கல்வி மற்றும் உயர்க்கல்வி பயிலும் மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

கல்வியில் புரட்சி செய்வதில், இந்தியாவுக்கே வழிகாட்டியாக தமிழ்நாடு இருக்க வேண்டும். உயர்க் கல்வியில் நாம்தான் முதலிடத்தில் இருக்கிறோம். எல்லோரையும் படிக்க வைக்க வேண்டும் என்ற அளவில் வாய்ப்பை உருவாக்கித்தர வேண்டும். விஐடி ஸ்டார் கல்வி திட்டம் மூலம் மாவட்டத்திற்கு ஒரு மாணவனையோ, மாணவியையோ தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இலவச கல்வி அளித்து, உணவு, தங்கும் விடுதி எல்லாவற்றையும் அளித்து வேலை வாய்ப்பையும் உருவாக்கி கொடுக்கிறோம். இதனை தமிழ்நாடு, ஆந்திரா, மத்தியபிரதேசம் போன்ற 3 மாவட்டத்தில் செய்து கொண்டிருக்கிறோம். இந்தியாவில் உள்ள அனைவருக்கும் உயர் கல்வி என்ற அறக்கட்டளையை துவங்கி உள்ளோம். இந்தியாவில் உள்ள 79 மாவட்டங்களில் இதை தொடங்கி உள்ளோம். எங்கள் மாவட்டத்தை பொருத்தவரை கடந்த 10 ஆண்டுகளில் 8200 பேருக்கு கல்வியை கொடுத்துள்ளோம், என்பதை பெருமையாக சொல்லிக்கொள்கிறேன்.

இதில் பாதி பணம் எனது பிறந்த நாளின் போது எங்கள் ஆசிரியர்கள் கொடுத்தது. இந்த ஆண்டு ₹1 கோடியே 38 லட்சம் கொடுத்தார்கள். அதனை அப்படியே அறக்கட்டளைக்கு கொடுத்துள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.

The post கல்வியில் புரட்சி செய்வதில் இந்தியாவிற்கே வழிகாட்டியாக தமிழ்நாடு விளங்க வேண்டும்: விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil ,India ,VID Minister ,G. Viswanathan ,Chennai ,International Tamil Information Technology ,Research ,Chennai Trade Centre ,Cybercrime Extra ,TGB ,Sanjay Kumar ,Anna University ,Vice ,Chancellor ,Velraj ,Ethiraj College ,Tamil Nadu ,
× RELATED தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட...