×

10 வருடம் பணி முடித்தவர்களுக்கு பதவி உயர்வு; பெண் காவலர்களுக்கு தனியாக ஓய்வு அறை: பேரவையில் இ.பரந்தாமன் எம்எல்ஏ கோரிக்கை


சென்னை: பேரவையில் உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை மானிய கோரிக்கையின் போது, எழும்பூர் தொகுதி எம்எல்ஏ இ.பரந்தாமன் (திமுக) பேசியதாவது: எழும்பூர் தொகுதியில் 6 இடங்களில் காவலர் குடியிருப்புகள் உள்ளன. இவற்றை ஆய்வு செய்தபோது, குப்பை அள்ளுவது, கழிவுநீர் கசிவு, பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உள்ளது. இவற்றைத் தீர்ப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சி மற்றும் மெட்ரோ வாட்டர் அதிகாரிகளோடு கலந்து ஆலோசித்ததில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியமும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியமும் தமது குடியிருப்புகளில் இத்தகைய பிரச்னைகளை ஏற்படும் போது அவற்றைச் சரிசெய்ய தனித்த ஒரு திட்டத்தைச் செயல்படுத்தி வருவது போல, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியமும் தமது குடியிருப்புகளில் காணப்படும் இவ்வகையான பிரச்னைகளை சீர் செய்ய தனித்த ஒரு திட்டத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும்.

இதேப்போல், கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பு வளாகத்தின் உள்ளே வெளியூரிலிருந்து பயற்சிக்காக வரும் காவலர்கள் தங்குவதற்கான பட்டாளியன் பர்ராக்ஸ் சமையல் கூடத்துடன் உள்ளது. எனினும், 1984ல் கட்டப்பட்ட இந்த கட்டிடம் தற்போது சீரமைக்க முடியாத நிலையில் பழுதடைந்து இருப்பதால், இதனை இடித்துவிட்டு, அதே இடத்தில் புதிய பட்டாளியன் பர்ராக்ஸ் நவீன சமையல் கூடத்துடன் கட்டித் தர வேண்டும். கீழ்ப்பாக்கம் புல்லாபுரத்தில் ஆதி-ஆந்திரா குடியிருப்புகள் உள்ளன. ஏறத்தாழ 1,000 ஆதி-ஆந்திரா குடும்பங்கள் இங்கு வசித்து வருகின்றன. இக்குடியிருப்பு மிக குறுகலான தெருக்களில் அமைந்துள்ளதால், குடிநீர் லாரி, ஆம்புலன்ஸ் போன்ற அத்தியாவசிய வாகனங்கள் உள்ளே சென்றுவர வசதி இல்லாமல் உள்ளது. இக்குடியிருப்புக்கு அருகே அமைந்துள்ள கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காலி இடத்தின் ஒரு சிறு பகுதியைச் சாலை அமைக்க ஒதுக்கிக் கொடுத்தால் இந்த பிரச்னையை தீர்க்க முடியும்.

காவல் துறையில் 10 வருடம் பணி முடித்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும், காவல் நிலையங்களில் பெண் காவலர்களுக்கு தனியாக ஓய்வு அறை மற்றும் கழிவறைகளை அமைத்து தர வேண்டும். அனைத்து காவல் நிலையங்களிலும் தூய்மை பணியாளர்களை நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ நியமிக்க வேண்டும், காவலர் குடியிருப்புகளை அதிகப்படுத்த வேண்டும், மாவட்ட தலைமை காவல் அலுவலகங்களில் அமைச்சு பணியாளர்களை அதிகப்படுத்த வேண்டும். சில காவல் நிலையங்களில் ஆய்வாளர்களுக்கு நான்கு சக்கர வாகனம் இல்லாமல் இருப்பதும், அப்படி இருந்தாலும் பழுதடைந்த‍தாக இருப்பதனையும் மாற்றி, தரமான வாகனங்களை வழங்க வேண்டும். காவலர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு கனிவுடன் பரிசீலித்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post 10 வருடம் பணி முடித்தவர்களுக்கு பதவி உயர்வு; பெண் காவலர்களுக்கு தனியாக ஓய்வு அறை: பேரவையில் இ.பரந்தாமன் எம்எல்ஏ கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : E. Bharandaman ,Chennai ,Department of Interior, Exclusion and Preparedness ,Fire and Rescue Department ,Berawada, Ramampur Block ,Dimuka ,Rampur block ,Dinakaran ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...