×

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஜாமீனில் விடுதலை

* உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
* சிறை வாசலில் தொண்டர்கள் வரவேற்பு

ராஞ்சி: ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் நேற்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த அவரை ஏராளமான கட்சி தொண்டர்கள் வரவேற்றனர். ஜார்க்கண்ட் மாநில முதல்வராக இருந்தவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன். ராஞ்சியின் பார்கெயின் அஞ்சல் என்ற இடத்தில் 8.86 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக வாங்கியதாக குற்றம்சாட்டி அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. கைது செய்வதற்கு முன் ஹேமந்த் சோரன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். ஜாமீன் கோரி ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து அவர் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தை நாடினார். வழக்கை நேற்று விசாரித்த ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற நீதிபதி ரோங்கன் முகோபாத்யாய, ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

தலா ₹50 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு தனிநபர் ஜாமீன் தொகையை செலுத்தும்படி அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஹேமந்த் சோரனின் வழக்கறிஞர் அருணாப் சவுத்ரி,‘‘ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அவர் இந்த குற்றத்தில் ஈடுபட்டதற்கான எந்த முகாந்திரமும் இல்லை.ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டால் அவர் குற்றத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு இல்லை. பரந்த சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் 8.86 ஏக்கர் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் அதனை உடமையாக்குதல் ஆகியவற்றில் மனுதாரருக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ உள்ள தொடர்பு உறுதிப்படுத்தப்படவில்லை’’ என நீதிமன்றம் தெரிவித்தது என்றார்.நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நேற்று மாலை அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த சோரனை ஜேஎம்எம் கட்சி தொண்டர்கள் உட்பட ஏராளமான தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

ஹேமந்த் சோரனை ஜாமீனில் விடுவித்ததற்காக அவரது மனைவியும் எம்எல்ஏவுமான கல்பனா சோரன் நீதித்துறைக்கு நன்றி தெரிவித்துள்ளார். பொய்யான வழக்கு: சிறையில் இருந்து வெளியே வந்த ஹேமந்த் சோரன் பாஜவை மறைமுகமாக தாக்கி பேசுகையில்‘‘ நம் நாட்டில் அரசியல் தலைவர்கள்,சமூக சேவகர்கள், பத்திரிகையாளர்களின் குரல்கள் நசுக்கப்படுவது கவலையளிக்கிறது. எனக்கு எதிராக சதி திட்டம் தீட்டப்பட்டது. என் மீது பொய்யான வழக்கு போடப்பட்டுள்ளது. 5 மாதங்கள் சிறையில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது.ஒன்றிய அரசுக்கு எதிராக குரலை எழுப்புபவர்கள் அடக்கப்படுகிறார்கள். லட்சியத்தை அடையும் வரை போராடுவேன்’’ என்றார்.

The post அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஜாமீனில் விடுதலை appeared first on Dinakaran.

Tags : Jharkhand ,Chief Minister ,Hemant Soran ,Enforcement Directorate ,Ranchi ,Jharkhand High Court ,former ,Dinakaran ,
× RELATED பாஜவை நாட்டை விட்டு வெளியேற்றுவோம்: ஹேமந்த் சோரன் சூளுரை