×
Saravana Stores

மேம்பால பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சி மறியல்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த கிழ்முதலம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட கவரப்பேட்டை பகுதியில் உள்ள பழைய மேம்பாலத்தை இடித்து விட்டு புதிய மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. அப்பணி மிகவும் மந்த கதியில் நடந்து வருவதால், ஒட்டியுள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மாணவர்கள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இது சம்பந்தமாக கம்யூனிஸ்ட் கட்சியினர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மேம்பாலப் பணிகளை துரிதப்படுத்தவும், பள்ளி மாணவர்கள் செல்லும் வகையில் வழித்தடத்தை மேம்படுத்த வேண்டும் என சாலை மறியல் ஈடுபட்டனர்.

அப்போது இன்ஸ்பெக்டர் டில்லி பாபு சம்பவ இடத்திற்கு விரைந்த வந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். ஆனால் இரண்டு வாரங்கள் ஆகியும் பள்ளி மாணவர்கள் செல்லும் வகையில் வழி ஏற்படுத்தவில்லை. எனவே, இதனை தொடர்ந்து, நேற்று கவரப்பேட்டை சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் எம்.ரவிச்சந்திரன் தலைமையில், மாநில குழு உறுப்பினர் லெனின், மாவட்ட செயலாளர் கே.கஜேந்திரன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் என்.எஸ்.பிரதாப்சந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் பி.வெங்கடேசன், ஏ.ஷாஹின்ஷா முன்னிலையில் 50க்கு மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கோரி கோஷங்கள் எழுப்பியவாறு சாலை மறியல் ஈடுபட்டனர்.

இது குறித்து அறிந்த இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், மேம்பாலப் பணி நடைபெறும் இடத்தில் ஓரமாக பள்ளி மாணவர்கள் செல்லும் வகையில் தற்காலிகமாக நடைபாதை ஏற்படுத்தி தர வேண்டும் என கூறினர். இதற்கு அங்கிருந்த அதிகாரிகள், மாவட்ட கலெக்டரிடம் தகவல் கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதை ஏற்காமல் கோஷங்களை எழுப்பியதால் போலீசார் அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலை அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

The post மேம்பால பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சி மறியல் appeared first on Dinakaran.

Tags : Communist Party ,Kummidipoondi ,Kavarappettai ,Kilmudalampedu Panchayat ,
× RELATED கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு...