×

குட்கா, பான்மசாலா, நிகோடின் புகையிலை உள்ளிட்ட போதைப்பொருள் தடுப்பு குறித்து ஆலோசனை கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடைபெற்றது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் 2016 மற்றும் விதிகள் 2011 நடைமுறை படுத்துவதற்கான மாவட்ட அளவிலான ஆலோசனை மற்றும் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா மற்றும் நிகோடின் கலந்த புகையிலைப் பொருட்கள் பயன்பாட்டினை தடுத்தல் தொடர்பான மாவட்ட அளவிலான குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா.ஸ்ரீநிவாச பெருமாள், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ஜெகதீஷ் சந்திர போஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் உணவுப் பொருட்களின் தரங்கள் குறித்து கடைகளில் ஆய்வு மேற்கொள்ளும் கள ஆய்வுகள் குறித்தும், கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் மற்றும் காவல் துறையினர் கூட்டு தணிக்கை மேற்கொள்ளும் பொழுது இரண்டு துறையினரும் கலந்து ஆலோசித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

கடைகளில் ஆய்வு மேற்கொள்ளும்போது ஏதேனும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை கண்டறியப்பட்டால் உடனடியாக கடைகளில் உரிமத்தை ரத்துசெய்ய வேண்டும். இவ்வறிக்கையினை உள்ளாட்சி அமைப்புகளிடம் சமர்ப்பிக்கப்பட்டு கடைகளை மீண்டும் திறக்க விடாமல் செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா மற்றும் நிகோடின் கலந்த புகையிலை பொருட்கள் பயன்படுத்தினை தடுப்பதற்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) ஆயுஷ் குப்தா, மாவட்ட சுகாதார அலுவலர் மீரா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பி.ரவிச்சந்திரன், மாவட்ட சுகாதார அலுவலர் பிரியராஜ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் எஸ்.கே.லலிதா சுதாகர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தனலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் நலஅலுவலர் செல்வராணி மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

The post குட்கா, பான்மசாலா, நிகோடின் புகையிலை உள்ளிட்ட போதைப்பொருள் தடுப்பு குறித்து ஆலோசனை கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடைபெற்றது appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Gudka ,Tamil Nadu government ,
× RELATED அரசின் நலத்திட்டங்களை அணுகுதல்...