×

தலைநகரில் கொட்டித் தீர்த்த கனமழை டெல்லி விமான நிலைய மேற்கூரை சரிந்தது: பயணிகளுடன் நின்றிருந்த கார்கள் நொறுங்கின; உடல் நசுங்கி ஒருவர் பலி 7 பேர் படுகாயம்

புதுடெல்லி: டெல்லியில் நேற்று கனமழை பெய்தது. இந்த மழையால் டெல்லி விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து பயணிகளுடன் நின்றிருந்த ஏராளமான கார்கள் நொறுங்கின, இதில் ஒருவர் பலியானார். 7 பேர் படுகாயமடைந்தனர். டெல்லியில் கடந்த இரண்டு மாதங்களாக வரலாறு காணாத வெப்பநிலை நீடித்து வந்தது. இதனால், குடிநீர் பற்றாக்குறை, உடல்நல பாதிப்பு என டெல்லிவாசிகள் பெரும் சிரமங்களை சந்தித்து வந்தனர். வெயில் தாக்குதலால் ஏற்பட்ட உயிரிழப்புகள் கொரோனா காலத்தையும் மிஞ்சும் வகையில் இருந்தது. வெயிலால் 400க்கும் மேற்பட்டோர் இதுவரையில் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், டெல்லியில் நேற்று முன்தினம் மாலை மிதமான மழை பெய்தது. இது, வெப்பத்திற்கு இதமளித்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை முதல் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. திடீரென பெய்த இந்த கனமழையால் நகரம் முழுவதும் பல பகுதிகளை வெள்ளம் சூழந்துள்ளது. குறிப்பாக, குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலைகள், சுரங்கப்பாதைகள் என பல இடங்களிலும் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக மாறிப் போனது. மழை காரணமாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. துவாரகா, ஜங்பூரா மற்றும் லஷ்மி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை தொடங்கியதுமே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதிகாலை 3 மணிக்கு போன மின்சாரம் மாலை 4 மணிக்கு வந்ததாக என் ஜங்பூரா குடியிருப்பு வாசி பிரணவ் மிஷ்ரா தெரிவித்தார்.

இதனிடையே, தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ளூர் விமானங்கள் இயக்கப்படக் கூடிய முனையம்-1ல் மேற்கூரை நேற்று அதிகாலை திடீரென சரிந்து விழுந்தது. பயணிகளை இறக்கி விடவும், ஏற்றிச் செல்லவும் இந்த இடத்தில்தான் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்படுவது வழக்கம். சரிந்து விழுந்த கூரை முழுவதும் இரும்பு, அலுமினியங்களால் ஆனது. பிரமாண்ட தூண்களின் மீது இரும்பு குழாய்கள், தகடுகளால் இவை பெரிய போல்ட், நட்டுகளால் இணைக்கப்பட்டுள்ளன. வெல்டிங்கும் வைத்து பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இப்படிப்பட்ட பிரமாண்ட மேற்கூரை நேற்று காலை 5 மணிக்கு சத்தமே இல்லாமல் சரிந்து விழுந்துள்ளது.

பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக காத்திருந்த கார்களின் மீது கூரையின் இரும்பு குழாய்கள் விழுந்த போதுதான் சத்தமே கேட்டது. கார்களில் இருந்த பயணிகள் காயத்தால் ஓலமிட்ட போதுதான், சற்று தூரத்தில் இருந்தவர்களுக்கு கூட, விபரீதம் நடந்தது தெரிய வந்தது. மேற்கூரை சரிந்து கார்களின் மீது விழுந்ததும், அதில் இருந்தவர்கள் காயத்தால் கதறி துடித்தனர். உடனே, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒன்றிய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், காவல் துறையினரும், வாடகைக் கார் ஓட்டுநர்களும் உதவிக்கு ஓடினர். ஆனால், கார்களின் மீது பெரிய இரும்பு குழாய் தூண்கள் விழுந்திருந்ததால், அதை அசைக்க கூட முடியவில்லை.

உடனடியாக, தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வரும் போது, பெரிய தூண்களை தூக்கக் கூடிய கிரேன்களை கொண்டு வரும்படி கூறியுள்ளனர். தீயணைப்பு துறைக்கு இந்த தகவல் 5.30 மணிக்கு கிடைத்தது. அடுத்த அரை மணி நேரத்தில் அவர்கள் இயந்திரங்களுடன் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபடத் தொடங்கினர். அதற்கு, விமான நிலைய உயரதிகாரிகள், பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் அங்கு குவிந்து மீட்பு பணியில் ஈடுபட தொடங்கினர். பெரிய கிரேன்களின் உதவியுடன் சரிந்து விழுந்த மேற்கூரை தூக்கி நிலை நிறுத்தும் பணி நடந்தது.

அவை தூக்கப்பட்டதும் கார்களில் சிக்கி இருந்தவர்கள் மீட்கப்பட்டு, முதல் கட்டமாக விமான நிலையம் அருகே உள்ள மடானா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர், அங்கிருந்து சப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அவர்களில் ரமேஷ் குமார் என்ற வாடகைக் கார் ஓட்டுநர் பரிதாபமாக இறந்தார். மற்ற 7 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஊழியர்கள் அசுர வேகத்தில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். பல மணி நேர முயற்சிக்குப் பிறகு மேற்கூரை மேலே தூக்கி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால், அந்த இடத்தில் நிலைமை சற்று சீரடைந்தது.

விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் விமானத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டார். விபத்துக்கான காரணம் குறித்து அறிக்கை அளிக்கும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். பின்னர், மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை பார்த்து நலம் விசாரித்தார். விபத்து நடந்த முனையம்-1ல் இருந்து நேற்று காலை இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் இயக்கப்பட இருந்தன. விபத்து நடப்பதற்கு முன்பாகவே கணிசமான பயணிகள் விமான நிலையத்துக்குள் சென்று இருந்தனர். சில பேர் மட்டுமே வெளியே சிக்கி இருந்தனர்.

இந்த விபத்து காரணமாக வெளியே இருந்த பயணிகள் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்டவில்லை. எனவே, உள்ளே சென்ற பயணிகள் மட்டும் விமானத்தில் ஏற்றிச் செல்லப்பட்டனர். பின்னர், அந்த முனையத்தில் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில் விமான சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், இந்த முனையத்தில் இருந்து பயணம் செய்ய இருந்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக விமானத் துறை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளது.

விமானநிலைய மேற்கூரை இடிந்து விழுந்த விவகாரம் தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தண்ணீரில் நடந்து சென்ற ஒருவர் மின்சாரம் தாக்கி இறந்துள்ளார். மேலும், வசந்த விகாரில் கட்டப்பட்டு வந்த சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார். அந்த இடிபாடுகளில் பல தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மழை பாதிப்பு குறித்து ஆளுநரும், அமைச்சர்கள் கோபால் ராய், அடிசி, சவுரப் பரத்வாஜ் உள்ளிட்டோர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளனர்.

* மோடி ஆட்சியில் சீர்குலைந்த உள்கட்டமைப்பு காங்கிரஸ் பட்டியல்
கடந்த 10 ஆண்டுகால மோடி அரசின் உள்கட்டமைப்பு சீர்குலைந்து போனதற்கு ஊழல்தான் காரணம் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது டிவிட்டர் பதிவில் அண்மை காலங்களில் தரமற்ற மோசமான கட்டுமான பணிகளால் ஏற்பட்ட சேதங்களை பட்டியலிட்டுள்ளார்.

அதன் விவரம்:
* டெல்லி விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
* மபியின் ஜபல்பூர் விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்தது.
* அயோத்தி ராமர் கோவில் கோபுரத்தில் மழை நீர் கசிவு.
* அயோத்தியில் புதிதாக அமைக்கப்பட்ட புதிய சாலைகளின் பரிதாப நிலை.
* மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பு சாலையில் விரிசல்.
* 2023 மற்றும் 2024 இல் பீகாரில் 13 புதிய பாலங்கள் இடிந்து விழுந்தன.
* டெல்லி பிரகதி மைதான் சுரங்கப்பாதை நீரில் மூழ்கியது.

* சமூகவலைதளங்களில்
பகிர்ந்த பொதுமக்கள்
தண்ணீரில் தத்தளித்து வரும் தலைநகரின் நிலை குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி இருப்பதால், வாகனங்கள் வரிசை கட்டி அப்படியே ஸ்தம்பித்து நிற்கிறது. இதனால் டெல்லி வாசிகளின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக இணையவாசிகள் புலம்பி வருகின்றனர்.

* வரலாறு காணாத மழை
டெல்லியில் நேற்று அதிகாலை 3 மணிக்கு தொடங்கிய மழையின் அளவு சப்தர்ஜங் வானிலை நிலையத்தில் 228 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது. டெல்லியில் ஜூன் மாதத்தில் 88 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் இந்தளவுக்கு பேய்மழை பெய்திருப்பது, மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு முன் கடந்த 1936ம் ஆண்டு, 235.6 மில்லி மீட்டர் மழை பெய்திருந்தது.

The post தலைநகரில் கொட்டித் தீர்த்த கனமழை டெல்லி விமான நிலைய மேற்கூரை சரிந்தது: பயணிகளுடன் நின்றிருந்த கார்கள் நொறுங்கின; உடல் நசுங்கி ஒருவர் பலி 7 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Delhi Airport ,New Delhi ,Delhi ,Dinakaran ,
× RELATED டெல்லி விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 ஆக உயர்வு!!