×

புதுவையில் அங்கீகாரம் இல்லாத 33 தனியார் பள்ளிகளை மூட உத்தரவு

*கல்வித்துறை இயக்குனர் அதிரடி

புதுச்சேரி : புதுச்சேரியில் 2ம் கட்டமாக அங்கீகாரமில்லாமல் இயங்கி வரும் 33 தனியார் பள்ளிகளை மூட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்குனரகத்தின் உரிய அங்கீகாரம் இன்றி, பல தனியார் பள்ளிகள் இயங்கி வருவது, ஆய்வு செய்ததில் தெரிய வந்துள்ளது.

அது சட்டத்துக்கு முரணானது என்று கருதப்படுகிறது. முதல் கட்டமாக அங்கீகாரம் பெறாத 33 தனியார் பள்ளிகளை மூடுமாறு கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி பள்ளி கல்வித்துறையானது உத்தரவிட்டது. மேலும், அத்தகைய அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியது.

அதனை தொடர்ந்து, 2வது கட்டமாக கிருஷ்ணா நகர் ஸ்ரீகலா மழலையர் பள்ளி, சங்கரதாஸ் சுவாமிகள் நகர் அக்‌ஷயா மழலையர் பள்ளி, முத்தியால்பேட்டை சிஷூ பவன் பள்ளி, அவ்வல் மழலையர் பள்ளி, சாரம் லட்சுமி பள்ளி, நவசக்தி நகர் ஸ்ரீராம் குரு பள்ளி, வில்லியனூர் ஆருத்ரா முன்மழலையர் பள்ளி, மூகாம்பிகை நகர் லிட்டில் ஜீனியஸ் முன்மழலையர் பள்ளி, தவளக்குப்பம் அகல்வ்யா சர்வதேச பள்ளி, அரியாங்குப்பம் ஆங்கிலோ சர்வதேச பள்ளி உள்ளிட்ட மேலும் 33 அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளிகளை மூடுமாறு பள்ளி கல்வி துறையானது கடந்த 25ம் தேதி உத்தரவிட்டுள்ளது.

எனவே, அத்தகைய அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்க்கும் பட்சத்தில், எதிர்காலத்தில் ஏதேனும் குறைகள் அல்லது முரண்பாடுகள் ஏற்பட்டால், பள்ளி நிர்வாகமோ அல்லது பெற்றோர்களே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும். எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கையின் போது, புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்குனரகத்தின் முறையான அங்கீகாரம் உள்ளதா என்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

அவ்வாறு, அங்கீகாரம் இல்லாமல் பள்ளியை நடத்துவது, புதுச்சேரி பள்ளி கல்வி சட்டம், 1987 மற்றும் புதுச்சேரி பள்ளி கல்வி விதிகள், 1996 ஆகியவற்றின் படி விதிகள் மற்றும் விதிமுறைகளை மீறுவதாகும். மேலும், குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாய கல்விக்கான உரிமை சட்டம் (ஆர்டிஇ), 2009 பிரிவு 18(5)ன் படி, அங்கீகார சான்றிதழை பெறாமல் பள்ளியை தொடர்ந்து நடத்துபவர் அங்கீகாரத்தை திரும்ப பெற்ற பிறகு, ஒரு லட்சம் ரூபாய் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதம் விதிக்கப்படும். மேலும் தொடர்ந்து விதி மீறல்கள் இருந்தால், அத்தகைய மீறல் தொடரும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post புதுவையில் அங்கீகாரம் இல்லாத 33 தனியார் பள்ளிகளை மூட உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Puduvai ,Education ,Action ,Puducherry ,Education Department ,Priyadarshini ,Puducherry School Education Directorate ,Dinakaran ,
× RELATED பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக கண்ணப்பன் நியமனம்