×

திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 33,560 ஏக்கரில் சாகுபடி குறுவை பயிர்களுக்கு காப்பீடு திட்டம்

*விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல்

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் இதுவரையில் 33 ஆயிரத்து 560 ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்றுள்ளதாகவும் குறுவை பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.திருவாருர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய விவசாயிகள் பலரும் பருத்திக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும், ஜுன் 12ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாததால் போர்வெல் வசதி இல்லாத இடங்களில் குறுவை சாகுபடி செய்ய முடியாத விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர்.

இறுதியாக கலெக்டர் சாருஸ்ரீ பேசியதாவது: திருவாரூர் மாவட்டத்தில் 2024-25ம் ஆண்டில் குறுவை பருவத்தில் 92 ஆயிரத்து 300 ஏக்கரிலும், சம்பா மற்றும் தாளடி பருவத்தில் 3 லட்சத்து 84 ஆயிரத்து 500 ஏக்கரிலும், கோடை சாகுபடி 24 ஆயிரத்து 375 ஏக்கரிலும் என மொத்தம் 5 லட்சத்து 1 ஆயிரத்து 175 ஏக்கரில் சாகுபடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதில் கோடை பருவத்தில் 4 ஆயிரத்து 580 ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு முறையிலும், 13 ஆயிரத்து 955 ஏக்கரில் திருந்திய நெல் சாகுபடி முறையிலும், 2 ஆயிரத்து 895 ஏக்கரில் சாதாரண நெல் நடவு முறையிலும் என மொத்தம் 21 ஆயிரத்து 355 ஏக்கரில் கோடை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டத்தில் இதுவரையில் 33 ஆயிரத்து 560 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் நடப்பாண்டில் குறுவை பயிருக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு ஏக்கருக்கான காப்பீட்டுத்தொகை ரூ.45 ஆயிரத்து 77 ஆகும். ஒரு ஏக்கருக்கு பிரிமியம் தொகை ரூ.721.24 ஆகும்.

பிரிமியம் தொகை செலுத்திட கடைசி நாள் அடுத்த மாதம் (ஜுலை) 31ம் தேதி ஆகும். எனவே குறுவை சாகுபடி செய்யவுள்ள விவசாயிகள் விரைந்து பயிர் காப்பீடு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், தமிழக அரசின் மண்ணுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் பசுந்தாள் உர விதைகள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஒரு விவசாயி அதிகபட்சமாக இத்திட்டத்தின் கீழ் 1 ஏக்கருக்கு 20 கிலோ விதைகள் வாங்கிக் கொள்ளலாம்.

மாவட்டத்தில் 14 ஆயிரத்து 500 ஏக்கருக்கு 290 மெ.டன் விதைகள் விநியோகிக்கப்படவுள்ளது. மேலும் 50 சதவீத மானியத்தில் மண்புழு உரம் தயாரித்தல் மையம், இயற்கை இடுபொருட்கள் தயாரித்தல் மையம், மானாவாரி நிலங்களில் உற்பத்தி ஊக்குவிக்கும் திட்டம், வேளாண் காடுகள் திட்டத்தின் வாயிலாக வேப்ப மரங்கள் நடுதலை ஊக்குவித்தல், உயிர் பூச்சிக் கொல்லி பண்புடைய தாவரங்களை வளர்த்தெடுப்பதற்கான ஆடாதொடை, நொச்சி நடவுப் பொருட்கள் வழங்குதல், அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க வட்டார வாரியாக ஒரு கிராமத்தில் அங்கக வேளாண்மைக்கான மாதிரிப் பண்ணைகள் உருவாக்குதல் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.

இத்திட்டத்தில் பயன்பெற தங்கள் பகுதி வேளாண் உதவி இயக்குநரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார். கூட்டத்தில் டி.ஆர்.ஒ சண்முகநாதன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக முதுநிலை மண்டல மேலாளர் புஹாரி, ஆர்.டி.ஒ கீர்த்தனாமணி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா, வேளாண் இணை இயக்குநர் ஏழுமலை, வேளாண் துணை இயக்குநர் (மாநில திட்டம்) லெட்சுமிகாந்தன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஹேமாஹெப்சிபாநிர்மலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 33,560 ஏக்கரில் சாகுபடி குறுவை பயிர்களுக்கு காப்பீடு திட்டம் appeared first on Dinakaran.

Tags : Tiruvarur district ,Thiruvarur ,
× RELATED திருவாரூர் மாவட்டத்தைச் சார்ந்த...