×

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் பழங்குடியின மக்களிடம் கலெக்டர் ஆய்வு

ஊட்டி : உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் குன்னூர் வட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகளை கலெக்டர் அருணா ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி, விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டமானது மாவட்டத்தின் உள்ள தாலுகாவில், மாதம் தோறும் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறும். அதன்படி, உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ், குன்னூர் வட்டம் உலிக்கல் பேரூராட்சிக்குட்பட்ட சடையன்கோம்பை, சின்னலகோம்பை மற்றும் ஆனைப்பள்ளம் ஆகிய பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் இத்திட்டம் நடைபெற்றது.

இதற்காக, மாவட்ட கலெக்டர் அருணா வனப்பகுதி வழியாக நடந்து சென்று, அப்பகுதிகளை நேரில் பார்வையிட்டு, அப்பகுதிகளிலுள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், சின்னலகோம்பை மற்றும் ஆனைப்பள்ளம் ஆகிய பகுதிகளில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின்கீழ் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களை நேரில் பார்வையிட்டார். குழந்தைகளின் வருகை பதிவேடுகள், குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டசத்து உணவுப் பொருட்களின் இருப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார்.

மேலும், வயதிற்கேற்றவாறு குழந்தைகளின் எடை, உயரம் சரியாக உள்ளதா என பரிசோதிக்க செய்து ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவினை உண்டு பார்த்து, ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, ஆனைப்பள்ளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியினை நேரில் பார்வையிட்டார். மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள அரசு உண்டு உறைவிட மாணவர் விடுதியினை பார்வையிட்டு, மாணவர்களுக்கு அட்டவணைப்படி உணவுகள் வழங்கப்படுகிறதா எனவும், விடுதி மற்றும் விடுதிக்குட்படட வளாகத்தில் கடைபிடிக்கப்பட்டுவரும் சுகாதாரம் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இறுதியாக குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் அருணா தலைமையில், அனைத்துத்துறை அலுவலர்களுடன் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின்கீழ், மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் விவரங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், ஒவ்வொரு துறை அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொள்ளும்போது, நடைபெற்று வரும் பணிகளின் தற்போதைய நிலை, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டு, அதனை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார். இந்நிகழ்வில், எஸ்பி சுந்தரவடிவேல், மாவட்ட வன அலுவலர் (ஊட்டி) கௌதம், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, குன்னூர் ஆர்டிஓ சதீஸ், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலா மேரி, மகளிர் திட்ட இயக்குநர் காசிநாதன், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) பாலுசாமி, வேளாண் பொறியியல்துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள் (பொ)) ராஜா, தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத் திட்டம் கல்பனா, ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, பொது மேலாளர்கள் ரவிச்சந்திரன் (தாட்கோ), திலகவதி (பொ) (மாவட்ட தொழில் மையம்), நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர்கள் த குழந்தைராஜ், ராஜா, குன்னூர் நகராட்சி ஆணையாளர் சசிகலா, மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீணா தேவி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் தேவகுமாரி, குன்னூர் வட்டாட்சியர் கனிசுந்தரம் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் பழங்குடியின மக்களிடம் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Aruna ,Coonoor ,Tamil Nadu government ,
× RELATED கைகளை சுத்தமாக கழுவ மாணவர்களுக்கு...